கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?
கேரளாவில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சிலர் ஆற்றில் குளிக்கும் போது திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் பின்னணி குரல் கொடுத்தது போல் ஏதோ பேசுகிறார்கள். நிலைத் தகவலில், "கேரளாவில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் திடீர் வெள்ளத்தால் மிகப்பெரிய சோகம் ஆழ்ந்த இரங்கல்கள் அனைவருக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Noorul Ameen என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளாவில் அருவியில் குளித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் சமீபத்தில் நடந்திருந்தால் மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. மேலும் வீடியோவில் உள்ளவர்களின் நிறம் கேரளாவைச் சார்ந்தவர்கள் தானா என்ற சந்தேகத்தை எழுப்பியது. எனவே, இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் உள்ளிட்ட ரிவர்ஸ் இமேஜ் தேடல் இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த சம்பவம் நடந்தது என்று கூறி சில யூடியூப் வீடியோக்கள் பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது மேலும் சில தெளிவான வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதில் பலரும் பாதுகாப்பாகக் கரையேறியதையும் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதையும் காண முடிந்தது.
நம்முடைய தேடுதலில், இந்த சம்பவம் 2021ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்தது என்று தெரியவந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபுவின் கேட்மன் நகரில் உள்ள டினுப்தான் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக 2021ம் ஆண்டு வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன. அதில், குடும்பத்தினர் 17 பேர் அந்த அருவி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களில் 7 வயதான சிறுமி, 17 வயது இளைஞர், 32 வயதான பெண்மணி ஒருவர் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பாதுகாப்பாக கரையேறினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய ஊடகங்களிலும் கூட இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: lobakmerah.com I Archive 1 I indiatoday.in I Archive 2
இதன் மூலம் 2021ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த சோக நிகழ்வின் வீடியோவை எடுத்து, 2023ல் கேரளாவில் நடந்தது போன்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேரளாவில் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அடித்துச்செல்லப்பட்டதாக பரவும் வீடியோ பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False