
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று நினைத்து வாக்கு செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தாராபுரத்தில் பிரதமர் மோடி பரப்புரை! 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று நினைத்து வாக்கு செலுத்துங்கள் தாமரை மலர்ந்தே தீரும்” என்று உள்ளது.
இந்த பதிவை சிவா கரூர் என்ற ஃபேஸ்புக் ஐடி-யை கொண்டவர் 2021 மார்ச் 30 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி தாராபுரத்தில் பிரசாரம் செய்ததை வைத்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிரதமர் மோடி 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று நினைத்து வாக்கு செலுத்துங்கள் தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படி அவர் பேசினாரா என்று பார்த்தோம்.
மோடியின் முழு பேச்சும் அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் வெற்றிவேல், வீர வேல் என்று தொடங்கி, வணக்கம் என்று முடிக்கும் வரை அவருடைய பேச்சு முழுமையாக இருந்தது. அந்த பேச்சை கேட்ட போது மோடி எந்த இடத்திலும் அப்படி கூறவில்லை என்பது தெரிந்தது. மோடியின் முழு பேச்சும் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டு இருந்தது. அதிலும் கூட பிரதமர் மோடி அப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.
அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
நியூஸ் 7 தமிழில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்ற நியூஸ் கார்டு இரண்டு இருந்தது. அதில், “தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஆண்டாள், ஔவையாரின் உத்வேகங்களை பெற்றுள்ளோம்; பெண்களை வலுப்படுத்தவே பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்” என்றும் “பெண்களை இழிவுபடுத்துவது திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கலாச்சாரம்; 1989ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர்கள் அம்மா ஜெயலலிதாவை நடத்திய விதம் மறக்க முடியாது” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
இது குறித்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவைத் தொடர்புகொண்டு இது நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்யும் படி கேட்டு அவருக்கு அனுப்பி வைத்தோம். அவரும் அதை பார்த்துவிட்டு போலியானது, நாங்கள் வெளியிட்டது இல்லை, என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 234 தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்று மோடி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழகத்தில் 234 தொகுதியிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள் என்று மோடி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:FACT CHECK: 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என நினைத்து வாக்களிக்கும்படி மோடி கேட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
