
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல் கல் என்று பிரதமர் மோடி பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாகக் கொண்டு மேலேயும் கீழேயும் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்த்து புகைப்படப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை நியூஸ் கார்டில், “தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் – பிரதமர் மோடி” என்று உள்ளது. அதன் மேலே போட்டோஷாப் முறையில் சொரணையுள்ள தமிழர்களே உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்! ஆக உண்மை வந்துவிட்டது. ஆம் நீட் என்பது தரத்தை அதிகப்படுத்த அல்ல, வடநாட்டானுக்கு பங்குவைக்க, கொள்ளைகொடுக்க, தமிழா, பாஸிச ஆர்எஸ்எஸ் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமானதே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத்தகவலில், “வட மாநிலத்தில் மாவட்டதிற்க்கு ஒரு மருத்துவ கல்லூரி திறக்க துப்பு இல்லை,, இருக்கிறதைலாம் விற்று தின்று உழைக்க வக்கற்ற ஊதாரி அண்டை வீட்ல கொள்ளையடிக்கிற வேலை இது,,! தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tamilnadu Congress Committee✋ friends என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Amul Shafiq என்பவர் 2021 மார்ச் 30 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் வந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேச்சு பல செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவருடைய யூடியூப் பக்கத்திலும் வீடியோ உள்ளது. இந்த சூழலில், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் உரியது என்று மோடி கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டை பார்க்கும்போதே இது புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை என்பது தெரிந்தது. இருப்பினும் ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்யவே ஆய்வு செய்தோம்.
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில் நீட் தேர்வு பற்றி பிரதமர் பேசியதாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலவே ஒரு நியூஸ் கார்டு இருந்தது. அதில், “வெற்றி வேல், வீரவேல் என தமிழில் கூறி தாராபுரம் பொதுக் கூட்டத்தில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனிடம் கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தாராபுரத்தில் பிரதமர் பேசியது பற்றித் தேடினோம். பிரதமரின் முழு உரையையும் தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்தது. அதில் எந்த இடத்திலும் அவர் நீட் தேர்வு பற்றிப் பேசியதாகவே இல்லை. தமிழக மருத்துவக் கல்லூரியில் இடங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானது என்று அவர் பேசியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். ஆனால் நமக்கு சிறு துண்டு செய்தி கூட கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க உள்ள அனைவருக்கும் சொந்தமானது என்று மோடி கூறினார் என்று பரவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழக மருத்துவக் கல்லூரிகள் இந்தியா முழுமைக்குமானது என்று மோடி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகள் முழு இந்தியாவிற்கும் என்று மோடி கூறியதாக பரவும் போலி நியூஸ்!
Fact Check By: Chendur PandianResult: False
