
நான் ஒரு மிஷனரி கைக்கூலி என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
செய்தியாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் ஒரு மிஷினரி கைகூலி. பாஜக நல்லதே செய்தாலும் எதிர்ப்பது மட்டுமே என் பணி.. பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து பரப்புவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை – தமிழ் கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை” என்று இருந்தது.
இந்த பதிவை விமல் கார்த்திகேசன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தங்களுக்கு எதிராக பேசுபவர்களை மிஷனரி, நக்சலைட், எதிர்க்கட்சி அனுதாபி என்று முத்திரைகுத்துவது ஒன்றும் புதிது இல்லை. பா.ஜ.க-வின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசி வருபவர் செய்தியாளர் செந்தில்வேல். இதனால் பா.ஜ.க ஆதரவாளர்களின் சமூக ஊடக பக்கங்களில் செந்திலை விமர்சித்து மிகக் கடுமையான பதிவுகள் வெளியாவது வழக்கம்தான்.
இந்த நிலையில் பாலிமர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் ஒரு மிஷனரி கைக்கூலி என செந்தில்வேல் ஒப்புக்கொண்டார் என்பது போல நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் செந்தில்வேல் இப்படி கூறினாரா, பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வந்ததா என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டை பார்க்கும் போது அது பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று இல்லை.
அதன் தமிழ் ஃபாண்ட், நிறம், பின்னணியில் பாலிமர் தொலைக்காட்சி லோகோ இல்லாதது என அனைத்தும் இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு என்பதை நமக்கு சொல்லியது.
இதை உறுதி செய்வதற்காக ஜூலை 13ம் தேதி பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்வையிட்டோம். அதில் செந்தில்வேல் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. நடிகர் விஜய் வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட வழக்கு தொடர்பான நியூஸ் கார்டு மட்டுமே கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், “செய்தியாளர் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. அப்படி ஒரு செய்தி பாலிமர் தொலைக்காட்சியில் வெளியாகவில்லை” என்றார்.

இதன் மூலம் “நான் ஒரு மிஷனரி கைக்கூலி” என்று செய்தியாளர் செந்தில்வேல் பேட்டி அளித்தார் என்று பரவும் பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நான் மிஷனரி கைக்கூலி என்று செய்தியாளர் செந்தில் பேட்டி அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நான் ஒரு மிஷனரி கைக்கூலி என்று செந்தில்வேல் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
