மழை வெள்ளத்தில் மக்கள் அவதியுற்றபோது மு.க.ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook

மு.க.ஸ்டாலின் ஏஐ ஏர் ஹாக்கி விளையாடிய பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மழையாவதுமசுராவது ...." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் 2024 அக்டோபர் 15ம் தேதி கன மழை பெய்தது. அப்போது பல பகுதிகளில் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றது. மழை விட்டதும் நீர் வடிந்துவிட்டது. சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததுமே முதலமைச்சர் சென்னையின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.


ஆனால், முதலமைச்சர் எதுவும் செய்யாமல் இருந்தது போலவும், மழை வெள்ளத்தில் மக்கள் அவதியுற்ற போது விளையாடிக் கொண்டிருந்தது போலவும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது சில மாதங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்ற போது வெளியான வீடியோ. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: instagram.com

கூகுள் க்ரோம் மற்றும் ஃபேஸ்புக்கில் ஏஐ ஏர் ஹாக்கி, மு.க.ஸ்டாலின், அமெரிக்கா பயணம் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது ஆகஸ்ட் 31, 2024 அன்று ஊடகங்கள் இந்த வீடியோவுடன் கூடிய செய்தியை வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், "அமெரிக்காவில் AI Air Hockey விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


சென்னை மற்றும் வட தமிழ்நாட்டில் மழை வெள்ளம் 2024 அக்டோபரில் ஏற்பட்டது. இந்த வீடியோவோ 2024 ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகி உள்ளது. அதாவது மழை வெள்ளத்துக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ள பாதிப்பின் போது மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த காட்சிகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மழை வெள்ள பாதிப்பின் போது மு.க.ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.


Archive

முடிவு:

மழை வெள்ளம் பற்றி கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Claim Review :   மழை வெள்ளத்தின் போது விளையாடிக்கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE