சுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி எங்களிடம் உள்ளார் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் சமூகம்

வேலூருக்கு சுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி தங்களிடம் உள்ளார் என்று தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Girl Missing 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

சிறுமி அழுதபடி இருக்கும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. மசூதியில் அந்த சிறுமி இருப்பது போல் உள்ளது, இந்தி அல்லது உருது மொழியில் பேசுவது போல உள்ளது. நிலைத் தகவலில், “Missing. Name: gayathri. Age : 5. Pls share. வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் இதை அனைத்து Group க்கு தெரிவிக்கவும் 919487111888” என்று இருந்தது.

இந்த பதிவை, News16 Tamil என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்‎ 2019 மே 20ம் தேதி பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 56 ஆயிரம் பேர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். தொடர்ந்து பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு இதே நிலைத்தகவலுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருந்தது. ஆனால், அந்த பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று சிலர் பதிவிட்டிருந்தனர். அதேநேரத்தில், அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்ற தகவலும் நமக்குக் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஒரே நிலைத்தகவலுடன் இந்த பதிவு இருந்ததால், இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். அந்த பதிவில் உள்ள தொலைபேசி எண் தொடர்புகொள்ளும் நிலையில் இல்லை. இதனால், அந்த வீடியோவில் என்ன பேசுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவில் ஒருவர் பேசுகிறார். அவர் பேசியதை மொழிபெயர்த்து கேட்டோம். அவர், “இந்த குழந்தை யாருடையது என்று தெரியவில்லை. குழந்தையின் பெயர் ரெஹானா. தந்தையின் பெயர் முகம்மது. குழந்தை தற்போது  மெஹ்மூதிய்யா மஸ்ஜித்தில் உள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்” என்று கூறுகிறார். இதன் மூலம் குழந்தையின் பெயர் காயத்ரி இல்லை என்பது தெரிந்தது. 

இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்தனர். அதைப் பார்க்கும்போது ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. இஸ்லாமியர் ஒருவர் வீடியோவில் பேசப்படுவதை முழுமையாக மொழிபெயர்த்து அளித்திருந்தார். அதில், அந்த மசூதி காஷ்மீர் மாநிலம் புல்மாவாவில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம், அந்த சிறுமி வேலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி இல்லை என்பது உறுதியானது.

Girl Missing 3.png

உண்மையில் இந்த சிறுமி பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா? பெற்றோரிடம் சேர்ந்தாரா என்று இணையத்தில் தேடினோம். ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் தேடியபோது, இதே நிலைத்தகவலுடன் வேறு வேறு குழந்தைகளின் படத்துடன் கூடிய காணவில்லை என்ற அறிவிப்பு பகிரப்பட்டு வருவது தெரிந்து. பலவும் ஆயிரக் கணக்கில் ஷேர் ஆகி இருந்தது தெரிந்தது.

Girl Missing 4.png

ஒரே படத்தை பயன்படுத்தி வேறு வேறு ஊர்களில் இவர்கள் கிடைக்கப்பெற்றதாகவும் தகவல்கள் பரவிவருவதையும் கண்டுபிடித்தோம்.

Archived Link

தொடர்ந்து தேடியபோது, Missing Kids in India, Missing Child India உள்ளிட்ட காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் சமூக ஊடக பக்கங்களில் இருந்து படங்களை எடுத்து அவரவருக்கு தோன்றியதை நிலைத்தகவலாக பதிவிட்டு பகிர்ந்து வருவது தெரிந்தது.

குழந்தைகள் மீது பரிவு காரணமாக பலரும் இதுபோன்ற தகவலை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த பதிவை உருவாக்கியவர்களின் நோக்கம் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சேரவேண்டும் என்பதாக இல்லை. அப்படி நல்ல எண்ணம் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், குழந்தையை பராமரிப்பவர் எண்ணை வழங்கியிருப்பார்கள்.

தங்களுக்கு லைக், ஷேர் விழ வேண்டும் என்பதற்காக வேறு மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகளின் படத்தை தொடர்ந்து காணவில்லை என்று பதிவிட்டு வருவது தெரிந்தது. பலரும் இந்த தகவல் பொய்யானது, மிகவும் பழைய செய்தி, உறுதி செய்யாமல் பகிராதீர்கள் என்று கமெண்ட் செய்திருந்தாலும் கூட பதிவுகள் அழிக்கப்படாமலேயே இருந்தன.

நம்முடைய ஆய்வில்,

அந்த சிறுமியின் பெயர் காயத்ரி இல்லை என்பதும் காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி என்பதும் தெரியவந்துள்ளது.

பதிவில் இடம் பெற்ற தொலைபேசி எண் வேலை செய்யவில்லை. ஒருவேளை சிறுமி கிடைத்தால் கூட இவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாது.

வேலூர் அரசு பள்ளி மாணவி எங்களிடம் உள்ளார் என்று ஒரே நிலைத்தகவலுடன் பல குழந்தைகளின் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

அதிக லைக்ஸ், ஷேர் வாங்க வேண்டும் என்பதற்காக இது போன்று குழந்தைகள் படத்தை இவர்கள் பதிவிட்டு வந்துள்ளது தெரிகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள சிறுமி வேலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி எங்களிடம் உள்ளார் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False