குலாப் ஜாமுனில் சிறுநீர் கழித்த வட இந்தியர் என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் வட இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபரின் முதுகில் “வடக்கன்” என்று எடிட் செய்து எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற ஒன்னுல குலோப்ஜாமுள இனிப்பு கூடிருச்சாம்… 🙄 ~~அதான் நம்ம வடக்கன் தம்பி உப்ப கலக்குறான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Dinesh Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வட இந்தியர்கள் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதாக, சுத்தமின்றி சமைப்பதாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட காலால் மிதித்து கோதுமை மாவு பிசையும் வட இந்தியர் என்று ஒரு வீடியோ பரவியது. ஆய்வு செய்து பார்த்த போது அது இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவானது. தற்போது குலாப் ஜாமுனில் சிறுநீர் கழிப்பது போன்று மோசமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை டெல்லி பாஜக நிர்வாகி ஒருவர் பகிர்ந்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதும் தெரிந்தது. அதில், சிறுநீர் கழிக்கும் நபர் இஸ்லாமியர் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்திருந்தனர்.

அந்த பா.ஜ.க நிர்வாகி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவுக்கு கமெண்ட் பகுதியில் வீடியோ ஒன்றை ஒருவர் பதிவிட்டிருந்தார். அது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் எடிட் செய்யப்படாத, முழுமையான வீடியோவாகும். அதைப் பார்த்த போது, சிறுநீர் கழிப்பது போன்று நையாண்டி செய்திருப்பது தெரிந்தது. 

Archive

முதலில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமரா கோணத்திலிருந்து பார்க்கும் போது சிறுநீர் கழிப்பது போன்று தெரிகிறது. சற்று நகர்த்தி வேறு கோணத்தில் காட்டும் போது, அந்த நபர் கையில் பாட்டில் ஒன்று இருப்பதும், அதிலிருந்து தண்ணீர் கொட்டுவதும் தெரிந்தது. 

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ashiq.billota என்ற நபர் வெளியிட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த லிங்கை திறந்து பார்த்த போது முழு வீடியோவை அந்த நபர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த வீடியோ பதிவில், இந்த வீடியோவை பார்க்கும் என்னுடைய follower யாருக்காவது இந்த வீடியோவின் உரிமையாளர் என்று தெரிந்தால் சொல்லுங்கள், இந்த வீடியோ அவருடையது என்பதைக் குறிப்பிடுகிறேன் என்று கூறியிருந்தார். கட்டுரையை முடித்துவிட்டு லிங்குகளை ஆர்கிவ் செய்யும் போது அந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் இருந்து அகற்றப்பட்டிருப்பது தெரிந்தது. 

அதே நேரத்தில் பாஜக பிரமுகரின் பதிவுக்கு பதில் அளித்து வெளியாகியிருந்த வீடியோ அகற்றப்படவில்லை. முழுமையான வீடியோவை வெளியிடாமல், எடிட் செய்யப்பட்ட வீடியோவை வைத்து பலரும் வதந்தி பரப்பி வருவது இதன் மூலம் தெளிவாகிறது. நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் குலாப் ஜாமுனில் சிறுநீர் கழிப்பது போன்று வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட வீடியோவை எடிட் செய்து வட இந்தியர் சிறுநீர் கழிக்கிறார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வேடிக்கை, குறும்புக்காக செய்யப்பட்ட வீடியோவை எடுத்து எடிட் செய்து, குலாப் ஜாமுனில் சிறுநீர் கழிக்கும் வட இந்தியர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குலாப் ஜாமுனில் சிறுநீர் கழித்த வட இந்தியர் என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered