உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காப்பாற்றப்பட்ட பூனை என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது ஸ்டேடியத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்த பூனையை ரசிகர்கள் காப்பாற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஸ்டேடியம் ஒன்றின் மேற்கூரை விளிம்பிலிருந்து பூனை ஒன்று கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பூனையை விளையாட்டைக் காண வந்த ரசிகர்கள் காப்பாற்றுகின்றனர். நிலைத் தகவலில். “பூனையின் உயிரை காப்பாற்றிய மக்கள்

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்டேடியத்தின் மேற்கூரையில் அந்தரத்தில் தொங்கிய பூனையின் உயிரை பார்வையாளர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை NewsM என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கத்தார் நாட்டில் நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது, உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் போது பூனை ஒன்று மேலே இருந்து கீழே விழுந்தது. அதை ரசிகர்கள் காப்பாற்றினார்கள் என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. மேலும், மைதானத்தை பார்க்கும் போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்கள் போல இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2021ம் ஆண்டு சிலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால், அவற்றில் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, அமெரிக்காவில் உள்ள மியாமியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக சில பதிவுகள் கிடைத்தன. ஆனால் அந்த வீடியோ பதிவு அனைத்தும் வேறு வேறு பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது போல இருந்தது. ஆனால் காட்சிகள் ஒத்துப்போவதைக் காண முடிந்தது. என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தோம்.

இது கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் மியாமியில் நடந்த உள்ளூர் போட்டியின் போது எடுக்கப்பட்டது என்று செய்திகள் கிடைத்தன.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஓராண்டுக்கு முன்பே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இந்த சம்பவம் அமெரிக்காவின் மியாமியில் நடந்ததாகச் செய்திகள் கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தின் உச்சியிலிருந்து விழுந்த பூனையைக் கால்பந்து ரசிகர்கள் காப்பாற்றினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் போது மைதானத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்த பூனை என்று பரவும் வீடியோ 2021ல் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காப்பாற்றப்பட்ட பூனை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False