குஜராத்தில் தேர்தல் நடந்த முறை என்று பரவும் மேற்கு வங்க வீடியோ!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குஜராத்தில் வாக்கு இயந்திரத்தைக் கூட பார்க்க அனுமதிக்காமல் பணியாளர்களே வாக்களித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வாக்குப்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், வாக்களிக்க வரும் நபர்களை வாக்களிக்க அனுமதிக்காமல், வாக்குச் சாவடியில் இருக்கும் நபர் ஒருவர் வாக்குகளை பதிவு செய்கிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தேர்தல் நடந்த முறை.

வாக்காளரை, வாக்கு இயந்திரத்தை கூட பார்க்க அனுமதிக்காமல் தேர்தல் பணியாளர்களே வாக்களிக்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Sathiyavathi Sathya என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 டிசம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், குஜராத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் நம்பத்தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்.

வாக்குப்பதிவு மையத்தில் வாக்காளர்களை அனுமதிக்காமல், முகவரே வாக்குகளை பதிவு செய்யும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். எந்தக் கட்சியினரையும் குற்றம்சாட்டவில்லை. இருப்பினும் இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதால் அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. கடந்த 2022 பிப்ரவரி 27ம் தேதி இந்த வீடியோவை TV9BanglaLive பதிவேற்றம் செய்திருந்தது. அதில், மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் தெற்கு டம்டம் என்ற பகுதியில் முகவரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். 

Archive

அதே நேரத்தில், மேற்கு வங்க காங்கிரஸ் மற்றும் பாஜக-வும் கூட இந்த வீடியோவை 2022 பிப்ரவரியில் பதிவிட்டிருந்தன. அதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தன. இதன் மூலம் இந்த வீடியோ குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

Archive

முடிவு:

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடந்தது என்று பரவும் வீடியோ 2022 பிப்ரவரியில் மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத்தில் தேர்தல் நடந்த முறை என்று பரவும் மேற்கு வங்க வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False