திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்குள் மின்சார கம்பம் அப்படியே உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் உள்ளது. நிலைத் தகவலில், “திராவிட மாடல் அரசில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்ட நவீன கழிவுநீர் கால்வாய் …

இதைக் கட்டிய இன்ஜினியருக்கும், இப்படிப்பட்ட புத்திசாலி இன்ஜினியர்களை வைத்திருக்கும் சுடலையின் விடிய அரசுக்கும் பாராட்டுக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதுச்சேரி மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு மின் கம்பத்தை அகற்றாமல் அல்லது அதைத் தவிர்த்து வேறு வழியைப் பயன்படுத்தாமல் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக செய்தி வெளியானது. அப்போதே இன்னும் சில தினங்களில் இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது என்று வதந்தி பரப்புவார்கள் என்று எதிர்பார்த்தோம். அது போலவே இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த கழிவுநீர் கால்வாய் புதுச்சேரியைச் சேர்ந்தது என்பத்தை உறுதி செய்ய தேவையான ஆதாரங்களைத் தேடினோம். இந்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டிருந்தது நினைவிலிருந்தது. எனவே, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களிலிருந்து அந்த வீடியோ மற்றும் செய்தியைத் தேடி எடுத்தோம். 

உண்மைப் பதிவைக் காண: thanthitv.com I Archive

அதில், “உறுவையாறு ஜெயம் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சாலையோரம் இருந்த மின்கம்பத்தோடு சேர்த்து கழிவுநீர் வாய்க்காலுக்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய்க்குள் தூண்கள் இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூகுள் ஸ்டிரீட் மேப்-ல் அந்த இடத்தை தேடி கண்டுபிடித்தோம்.

சாலை, கால்வாய் அமைக்க ஒப்பந்தம் பெரும் ஒப்பந்ததாரர்கள் அவசரகதியில் பணியை முடித்து பணம் பெறுவதிலேயே கவனமாக உள்ளனர். இதனால் பல இடங்களில் இப்படி தவறுகள் நடப்பதாகச் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் கண்காணிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இப்படி சம்பவம் நடக்கவே இல்லை என்று நாம் கூறவில்லை. தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நாம் தேடிய போது செய்தி கிடைத்தது.

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் – சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புதுச்சேரியில் மின் கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டதன் புகைப்படத்தை எடுத்து இது தமிழ்நாட்டில் நடந்தது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False