மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வழங்கியதை எதிர்த்து த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு செய்துள்ளதாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆதவ் அர்ஜுனா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதவ் அர்ஜுனா மனு! கலைஞர் மகளிர் உரிமத்தொகையை முன்கூட்டியே வழங்கியதை எதிர்த்து த.வெ.க.வின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே இன்று (13 பிப்ரவரி 2026) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது. இதை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஆதவ் அர்ஜுனா அப்படி வழக்கு தாக்கல் செய்ததாக செய்திகள் எதுவும் இல்லை.

இது தொடர்பாக தவெக தரப்பை விசாரித்தபோது இது தவறான தகவல் என்று கூறினர். ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை அறிய முடியவில்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அதிலும் அவர் அப்படி எந்த ஒரு பதிவையும் வௌியிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக ஆதவ் அர்ஜுனா கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை, வழக்கு தொடரப்பட்டதாக ஊடகங்களிலும் எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பது தெளிவானது.

அடுத்ததாக, இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வௌியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அதில் அப்படி எதுவும் இல்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது. 

இதை உறுதி செய்துகொள்ள, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று தெரிவித்ததுடன். இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு புதிய நியூஸ் கார்டை தயாரித்து நமக்கு அனுப்பினார். இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களிலும் வெளியிடுவதாக நம்மிடம் தெரிவித்தார். அதன்படி, “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவையும் வெளியிட்டனர். 

இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கியதை எதிர்த்து தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு என சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று புதிய தலைமுறை விளக்கம் அளித்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Avatar

Title:மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தாரா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply