செயற்கையாக முந்திரிப் பருப்பு தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!
தொழிற்சாலையில் செயற்கை முறையில் முந்திரி தயாரிக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இயந்திரம் ஒன்றில் இருந்து முந்திரி வடிவத்தில் வெளிவரும் உணவுப் பொருள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்தியில் ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், "செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு! இது ஒரு எச்சரிக்கை பதிவு!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Veeramani Sekar என்பவர் 2020 ஆகஸ்ட் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முந்திரி வடிவத்தில் இருந்தாலும் வழக்கமான முதல் தரமான முந்திரியைக் காட்டிலும் இது அளவில் பெரிதாக இருக்கிறது. இந்த சைசில் முந்திரி வடிவத்தில் உள்ள பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இது பிஸ்கட் தயாரிப்பு இயந்திரமா, முந்திரி தயாரிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என பல வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது உண்டு. அப்படி முந்திரி செயற்கை முறையில் போலியாக உருவாக்கப்படுவதாக இதுவரை எந்த செய்தியும் வந்தது இல்லை. இந்த வீடியோ உண்மையா என்று தேடினோம். வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உள்பட பல ஃபேக்ட் செக் ஊடகங்களும் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியிருப்பது தெரிந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு நம்முடைய தேடலில் ஈடுபட்டோம். 2020 ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் போலி முந்திரி என்று இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளதைக் காண முடிந்தது. அதைத் தொடர்ந்து வட இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒரே வீடியோவை பகிர்ந்து வந்துள்ளனர் என்பது தெரிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதன் அசல் வீடியோ நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இது போன்று அச்சுகளிலிருந்து வார்க்கப்படும் முந்திரி பிஸ்கட் தொடர்பான வீடியோக்கள் பல நமக்கு கிடைத்தன. முந்திரி வடிவத்தில் தயாரிக்கப்படும் பிஸ்கட் மெஷின் விற்பனை என்று யூடியூபில் சிலர் இதே போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்திருப்பதை காண முடிந்தது.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வேறு ஏதேனும் ஆதாரம் கிடைத்துள்ளதா என்று பார்த்தோம். அவர்களும் முந்தரி பிஸ்கட் மெஷின் பற்றிய வீடியோவை வைத்திருந்தனர். மேலும், ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை பதிவிட்டவர் மீது போலீசில் புகார் செய்யப் போவதாக முந்திரி விவசாயி கமெண்ட் செய்திருப்பதாக ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தியில் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன்மூலமாக, முந்திரி பிஸ்கட் தயாரிக்க பயன்படும் இயந்திரத்தின் வீடியோவை போலியான முந்திரி தயாரிக்கப்படுகிறது என்று தவறான கருத்தைச் சேர்த்து பகிர்ந்திருப்பது தெரிகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:செயற்கையாக முந்திரிப் பருப்பு தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False