
அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோடி பிரதமராக இருக்கக் கூடாது – ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் விளையாடுவேனா என்று தெரியாது; உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டு நவம்பர் 21, 2023 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இறுதி போட்டியைக் காண வந்த மோடியை தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பிரதமராக நரேந்திர மோடி இருக்கக் கூடாது என்று ரோஹித் ஷர்மா கூறியதாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ்கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் ரோஹித் ஷர்மா அப்படி கூறியிருந்தால் அது தொடர்பான செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். ஆனால், சிறு துண்டு செய்தியாகக் கூட அப்படி எந்த ஒரு செய்தியையும் ஊடகங்கள் வெளியிடவில்லை. இதன் மூலம் இந்த செய்தி தவறானது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்த நியூஸ் கார்டின் பின்னணி வடிவமைப்பும் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நமக்குத் தெளிவாகத் தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

இப்படி நியூஸ் கார்டு எதையாவது புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். நமக்கு அப்படி எந்த நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. எனவே, புதிய தலைமுறை பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டை அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி உண்மை நிலவரம் பற்றி கேட்டோம்.
இந்த நியூஸ் கார்டை பார்த்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்ட புதிய தலைமுறை பொறுப்பாளர், “இது போலியானது, இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் இந்தியா அடுத்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நரேந்திர மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று ரோஹித் ஷர்மா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அடுத்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று ரோஹித் ஷர்மா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘மோடி பிரதமராக இருக்கக்கூடாது’ என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
