FACT CHECK: 39ஐ விட 38.51 சதவிகிதம் பெரியது என்று புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் கூறப்பட்டதா?
39ஐ விட 38.51 சதவிகிதம் மிகப் பெரியது என்று வரைபடம் வைத்து புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பின் காட்சியை புகைப்படமாக எடுத்து மீம் வடிவில் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "லயோலா கருத்து கணிப்புக்கு டப்ஃ கொடுப்பான் போல? 39% விட 38.5 % தான் பெருசாம் சரி இருக்கட்டும் மொத்தமா கூட்டினா 114.44% வருது? திராவிட அடிமைகளுக்கு எப்படி சிந்திக்கும் திறன் இருக்கும்?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை அமாவாச - Naga Raja Chozhan MA என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 24ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3 I Facebook 4 I Archive 4
உண்மை அறிவோம்:
பூனைக் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டதாக நினைத்துக்கொள்ளும் என்று பழமொழி சொல்வார்கள். அதைப் போல இருக்கிறது இவர்களின் பதிவு. புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பை டி.வி மீது ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் மறைத்துள்ளது என்பதை மறைத்து அ.தி.மு.க-வுக்கு 39 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று புலம்பி வருவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
உண்மையில் எவ்வளவு சதவிகிதம் பேர் அ..தி.மு.க-வுக்கு வாக்களிப்போம் என்று கூறினார்கள் என்று பார்க்க புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பார்த்தோம். அதில், அ.தி.மு.க-வுக்கு 28.39 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த 28.39ல் 28. வரைக்கும் டி.வி மீது ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மறைத்திருப்பது தெரிந்தது.
தொடர்ந்து புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோக்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்தபோது அனைத்திலும் 28.39 சதவிகிதம் என்று இருப்பது உறுதியானது.
இது பற்றி கருத்து அறிய புதிய தலைமுறை டிஜிட்டர் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், "எங்கள் கருத்துக் கணிப்பில் இடம் பெற்ற எண்ணிக்கையை மறைத்துவிட்டு தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். இது உண்மை இல்லை" என்றார்.
இதன் அடிப்படையில் கருத்துக் கணிப்பில் அதிமுக 39 சதவிகிதம் பெற்றதை குறைத்தும் தி.மு.க பெற்ற 38.51 சதவிகிதத்தை பெரியதாகவும் புதிய தலைமுறை காட்டியுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 39 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்ததை சிறியதாகவும், தி.மு.க பெற்ற 38.51 சதவிகித ஆதரவை புதிய தலைமுறை காட்டியது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:39ஐ விட 38.51 சதவிகிதம் பெரியது என்று புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் கூறப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False