பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஸ்வப்னா பங்கேற்றாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளின் திருமண விழாவில் தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா பங்கேற்றதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பினராயி விஜயன் மகள் திருமண புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் மணியின் தலையை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். 

நிலைத் தகவலில், “மிக விரைவில் பிணநாறி விஜயனுக்கு சங்கு ஊதப்படும். கேரளாவில் ஹிந்துக்கள் கொண்டாட்டம் ..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Tamil Nadu BJP Supporter தமிழ்நாடு பாஜக ஆதரவாளர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் K Santhosh Kumar என்பவர் 2020 ஜூலை 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த புகைப்படத்தில் தங்கக் கடத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவின் தலையை போட்டோ ஷாப் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அவருடைய தலை மட்டும் மற்றவர்கள் தலையைக் காட்டிலும் சற்று பெரியதாகவும் கொஞ்சம் தெளிவாகவும் உள்ளது. இந்த படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

இந்த படம் உண்மையா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அசல் படமும் அது தொடர்பான செய்தியும் நமக்கு கிடைத்தது. 

Facebook LinkArchived Link

இந்த புகைப்படத்தை 2020 ஜூன் 15ம் தேதி கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. 

மேலும் நியூஸ் மினிட் ஆங்கில தளத்தில் இந்த புகைப்படம் தொடர்பாக இ.பி.ஜெயராமன் போலீசில் புகார் செய்திருக்கும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஜூன் 15ம் தேதி கேரள முதல்வர் மகள் திருமணம் நடந்தபோது, தானும், தன்னுடைய மனைவி பி.கே.இந்திராவும் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம் அது. பி.கே.இந்திரா படத்தை மார்ஃபிங் செய்து தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா படத்தை வைத்து காங்கிரஸ், பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஷேர் செய்து வருவதாக அவர் அந்த புகாரில் கூறியதாக இருந்தது. 

thenewsminute.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

அசல் படம் கிடைத்துள்ளது.

கேரள அமைச்சரின் மனைவியின் தலையில் ஸ்வப்னா தலை வைத்து எடிட் செய்திருப்பது உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக கேரள அமைச்சர் போலீசில் புகார் செய்திருப்பதாக செய்தி கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கேரள மகள் திருமணத்தின் போது தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஸ்வப்னா பங்கேற்றாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •