
மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாரிதாஸ், சவுக்கு சங்கர் கைது. ஜனநாயகன் படத்தை கரூர் சம்பவத்தோடு தொடர்புபடுத்தி தவறான தகவல்களை x தளத்தில் பதிவிட்டதாக சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் இவ்விருவரின் மேலும் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது ஜனநாயகன் படக்குழு. தற்போது இருவரும் தலைமறைவாக உள்ளதாக தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகி இருவரும் கைது என்று தலைப்பு வைத்துவிட்டு, கீழே இருவரும் தலைமறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய தலைமுறை லோகோவை திருத்தி புதிய தலைமறை என்று மாற்றியுள்ளனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன. ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா… அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. காவல் துறையைத் தொடர்புகொண்டு இவர்கள் இருவர் மீதும் ஜனநாயகன் படக்குழு புகார் அளித்துள்ளதா என்று கேட்டோம். அவர்களும் அப்படி எந்த ஒரு புகாரும் வரவில்லை, இவர்கள் இருவரும் கைது செய்யப்படவும் இல்லை என்றனர்.
புதிய தலைமுறை பெயரை மாற்றி நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தாலும் இது போலியானது என்பதை உறுதிசெய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவுக்கு அனுப்பி விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய டிஜிட்டல் பொறுப்பாளர், “புதிய தலைமறை என்று போலியான பெயரை வைத்து நியூஸ் கார்டை பரப்பியுள்ளனர். இது போலியானது” என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜனநாயகன் படத்தை கரூர் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பதிவிட்ட சவுக்கு சங்கர், மாரிதாஸ் கைது என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது, போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


