
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 151 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றும் என புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அருகில் 151-158 என்றும், மு.க.ஸ்டாலின் படத்துக்கு அருகே 76 – 83 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த கருத்து கணிப்பை அனைவரும் ஷேர் செய்யவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஆகமம் ஜானகிராமன் என்பவர் 2021 மார்ச் 23 அன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களில் 1500க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பல விதமான வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை 2021 மார்ச் 22ம் தேதிதான் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளே அ.தி.மு.க வெற்றி பெறும் என புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பலரும் பதிவிட்டு வருவது ஆச்சரியமாக இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க 151 – 158 இடங்களைப் பெறும் என புதிய தலைமுறையில் நியூஸ் கார்டு வெளியானதாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தொகுதி எண்கள் எடிட் செய்து வைத்திருப்பதை கூர்ந்து கவனிக்கும் போது தெரிந்துகொள்ள முடிகிறது. இதையும் 1500க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளார்களே என வேடிக்கையாக இருந்தது. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம். அப்போது அதில், முதல்வர் பழனிசாமிக்கு 76 – 83 இடங்களும் மு.க.ஸ்டாலினுக்கு 76 – 83 இடங்களும் கிடைக்கும் என அவர்கள் வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்பின் நியூஸ் கார்டு கிடைத்தது. அவர்கள் வெளியிட்ட வீடியோவையும் தேடி எடுத்தோம். அதில் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது.
இது தொடர்பாக புதிய தலைமுறை இணையதளம் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், இது போலியானது என்பதை உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பு நியூஸ் கார்டை எடிட் செய்து மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.
முடிவு:
சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அ.தி.மு.க வெற்றி பெறும் என புதிய தமிழகம் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
