ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி பிரசார வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வேலை இல்லாமல் facebook instagram இல் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் மாதம் ₹8500 இது தான் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும் வழியாம் கோமாளிக்கு..😅😂 பாத்துகோங்க மக்களே" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலையே செய்யாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் நேரத்தை செலவழித்தாலே மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி இந்தியில் பேசியதால் அவர் என்ன பேசினார் என்பது நமக்குப் புரியவில்லை. எனவே, சமூக ஊடகங்களில் நேரத்தை செலவழித்தால் மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இளைஞர்களுக்கு வேலை பயிற்சியுடன் மாதம் ரூ.8500 வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதி கூறியதாக, செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: economictimes.indiatimes.com I Archive

பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி இப்படி பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த செய்திகளிலேயே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சியை காண முடிந்தது. பீகார் மாநிலம் பாகல்பூர், ராகுல் காந்தி என்று யூடியூபில் டைப் செய்து தேடினோம். முழு வீடியோவும் ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் இருந்து நமக்கு கிடைத்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்ற ஆடியோ எங்கு வருகிறது என்று தேடிப் பார்த்தோம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்ற வார்த்தைகளை அவர் அந்த வீடியோவின் 9:50வது நிமிடத்தில் வந்தது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்தது போன்று இல்லை. மாதா மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்ற பகுதி வீடியோவின் 12:15 நிமிடத்தில் வந்தது. தொடர்ந்து கேட்டபோது 12.42 நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பகுதி வந்தது. இதன் மூலம் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

ராகுல் காந்தி என்ன கூறினார் என்று நம்முடைய இந்தி குழுவின் உதவியுடன் ஆய்வைத் தொடர்ந்தோம்.

அந்த பகுதியில் "வேலையில்லா திண்டாட்டத்தின் மையமாக இந்தியாவை நரேந்திர மோடி மாற்றியுள்ளார். இளைஞர்களிடம் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டால், எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். இளைஞர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செலவிடுகின்றனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்ப்பு திட்டத்தை வழங்குவோம். வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ பெற்றவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும்.

அதாவது, அவர்களுக்கு தகுந்த தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு ஓவ்வொரு மாதமும் ரூ.8500 வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு தகுதி திறமைக்கு ஏற்ப அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும். இதன் மூலம் வேலையின்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு வேலையும், ஒவ்வொரு மாதமும் ரூ.8500 வீதம், ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்" என்று ராகுல் பேசியுள்ளதாக, நம்மிடம் அவர்கள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக பரவும் வீடியோ உண்மையானதுதான்... ஆனால், முழுமையானது இல்லை. வேலையில்லாமல் சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி வழங்கி அவர்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்ற பகுதியை அகற்றிவிட்டு, இதனால் ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்ற பகுதி மட்டும் விஷம நோக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி வழங்கப்பட்டு மாதம் தோறும் அவர்களுக்கு ரூ.8500 வழங்கப்படும். இதன் மூலம் வேலையின்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் 7-8 மணி நேரம் செலவிடும் இளைஞர்களுக்கு வேலையும் பணமும் கிடைக்கும் என்று ராகுல் காந்தி கூறியதை திரித்து ஃபேஸ்புக்கில் நேரத்தை செலவிடுபவர்களுக்கு ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: Misleading