கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

ஒரு படத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் மற்றொரு படத்தில் கழுத்தில் சிலுவை டாலருடனும் பிரியங்கா காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

PRIYANKA 2.png

Archived link

முதல் படத்தில் பிரியங்கா காந்தி, ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கும் படத்தை வைத்துள்ளனர். அடுத்த படத்தில், பிரியங்கா காந்தி, சிலுவை டாலர் உள்ள செயினை அணிந்திருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர்.

மிக மோசமான தடித்த வார்த்தைகளுடன் பதிவு தொடங்குகிறது. பொது வெளியில் குறிப்பாக ஒரு பெண்ணிடம் சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கொண்டு பதிவிட்டுள்ளனர். Friends of TN BJP என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Madhavan Sendilkumar என்பவர் 2019 மே 19ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாத்தில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருந்தார். இதைத் தொடர்ந்து அவரைப் பற்றி தொடர்ந்து பல தவறான பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியது. இந்த நிலையில், பிரியங்கா காந்தி ருத்ராட்சம் மற்றும் சிலுவை டாலர் அணிந்த படங்கள் வெளியாகி உள்ளது.

இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த படம் தொடர்பாக பல்வேறு செய்தி இணையதளங்கள் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியுள்ளதும் தெரியவந்தது.

PRIYANKA 3.png

நம்முடைய Fact Crescendo இந்தி பிரிவும் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரியவந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய தேடலில், பிரியங்கா காந்தி சிலுவை அணிந்ததாக கூறப்படும் படம் மார்ஃபிங் செய்யப்பட்ட போலி என்பதை உறுதி செய்யும் வகையில் பிரியங்கா காந்தியின் அசல் படம் நமக்கு கிடைத்தது.

PRIYANKA 4.png

gettyimages.in புகைப்படங்கள் விற்பனை இணைய தளத்தில் இருந்து பிரியங்கா காந்தி படத்தை எடுத்துள்ளனர்.

அந்த படத்தின் பின்னணி தகவலை ஆய்வு செய்தோம். 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த படத்தை அதன் இணைய தள பக்கம் சென்று பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அந்த படத்தில், பிரியங்கா காந்தி நீள்வட்ட வடிவிலான டாலர் ஒன்றை அணிந்திருக்கிறார். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று சிலுவை டாலரை பிரியங்கா காந்தி அணியவில்லை.

மேலும், 2017ல் குறிப்பிட்ட அந்த நாளில் பிரியங்கா காந்தி பங்கேற்ற உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின் வேறு சில படங்களும் நமக்கு கிடைத்தன. அந்த படங்களை ஆய்வு செய்ததன் மூலம், பிரியங்கா காந்தி நீள்வட்ட வடிவ டாலர் அணிந்திருந்தது உறுதியானது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

PRIYANKA 5A.png

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரியங்கா காந்தி படத்தில் மார்ஃபிங் செய்து சிலுவை டாலரை வைத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. மேலும், மிக மோசமான, கீழ்த்தரமான நிலைத்தகவலுடன் இந்த மார்ஃபிங் செய்யப்பட்ட படத்தை பா.ஜ.க-வினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •