
மகாபாரதத்தை 10 பாகங்களாக வெளியிட உள்ளதாக ராஜமவுலி அறிவிப்பு வெளியிட்டதால், திராவிடர்கள் கதறி வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தினத்தந்தி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மகாபாரதம் படம் 10 பாகங்களாக வரும். டைரக்டர் ராஜமவுலி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சும்மா மெரட்ட போறாப்ள 🔥🔥🔥 இனி திரா**யா மவனுங்க கதறல் சத்தம் காதை கிழிக்கும் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த பதிவை ஈன வெங்காயம் என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2023 மே 11ம் தேதி பதிவிட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் கு.பாறை குணா கருப்பசாமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 11ம் தேதி இதே பதிவை பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், சும்மா மெரட்ட போறாப்ள…. இனி கதறல் சத்தம் காதை கிழிக்கும் 🤣 திரைப்பட உலகின் ராஜகுரு டைரக்டர் ராஜமௌலி சார்… தலை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
இந்திய இதிகாசமான மகாபாரதத்தைப் படமாக தயாரிக்க ஆசைப்படுவதாக பிரபல திரைப்பட இயக்குநர் ராஜமவுலி கூறி வருகிறார். ஆனால் அவர் மகாபாரதத்தை எப்போது படமாக இயக்கப் போகிறேன் என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மகாபாரதம் படத்தை இயக்க அறிவிப்பு வெளியிட்டது போலவும், 10 பாகங்களாக அது வெளியாகும் என்று ராஜமவுலி கூறியது போன்று பலரும் சில்லறை சிதறவிட்டு வருகின்றனர். அந்த படத்தைப் பார்த்து திராவிட அமைப்பினர் கதறுகிறார்கள் என்பது போன்று நக்கலாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் படத்திற்கான அறிவிப்பை ராஜமவுலி வெளியிட்டதாகச் செய்திகள் எதுவும் இல்லை. எனவே, இந்த தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில், மகாபாரதம் திரைப்படமாக தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது என்று ராஜமவுலி கூறிதாக தினத் தந்தி செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா என்று அறிய அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், “இது மிகவும் பெரிய படம். மகாபாரதம் எடுத்தால் நிச்சயம் பத்து பாகங்களாக எடுக்க வேண்டி வரும் என்று நினைக்கிறேன். ஆனால் எத்தனை பாகங்களாக வரும் என்பதை இப்போதே சரியாக கணிக்க முடியாது” என்று ராஜமவுலி கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் செய்தி சரியாக உள்ளது, ஆனால் அதை வைத்து விஷமத்தனமாக பதிவை வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவானது.
அடுத்ததாக ராஜமவுலி அளித்த பேட்டி வீடியோவை தேடி எடுத்தோம். 2023 ஏப்ரலில் ஹைதராபாத்தில் நடந்த மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்ற ராஜமவுலி மகாபாரதத்தைப் படமாக இயக்குவது தன்னுடைய வாழ்வின் லட்சியம் என்பது போல பேசியிருந்தார். அந்த வீடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியாகி இருந்தது. மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர் ஒருவர், “தொடராகவே 266 எபிசோட்கள் வெளியான மகாபாரதத்தைப் படமாக வெளியிடுவது என்றால் எத்தனை பாகமாக வெளியிடுவீர்கள்” என்று கேட்டார். இந்த பகுதி வீடியோவின் 21வது நிமிடத்தில் வருகிறது.
அப்போது ராஜமவுலி, “இந்தியாவில் இருக்கும் பல தரப்பட்ட மகாபாரதங்களைப் படித்த பின்னரே அதைப் படமாக எடுக்கும் பணியைத் தொடங்க முடியும். பல்வேறு மகாபாரதங்களை படித்து முடிக்கவே ஓராண்டுக்கு மேலாகிவிடும். இது மிகவும் கடினமான வேலை. தற்போதைய சூழலில் 10 பாகங்களில் படங்களை எடுக்கலாம் என்று கருதுகிறேன். ஆனால் அது பற்றி எனக்குத் தெரியவில்லை” என்கிறார்.
இந்த பேட்டியைப் பார்க்கும் போது மகாபாரதத்தை இப்போது படமாக எடுக்க இருக்கிறேன், 10 பாகங்களாக அது வரும் என்று அவர் கூறவில்லை. எதிர்காலத்தில் எடுத்தால் 10 பாகமாக வரலாம் அதற்கு மேலும் கீழும் கூட ஆகலாம், அது பற்றி தெரியவில்லை என்று அவர் கூறியிருப்பது தெரிகிறது. அதற்குள்ளாகப் படமே தயாரித்து வெளியாக இருப்பது போன்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு முழுமையான தகவல் கொண்டது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க ஆசை உள்ளது என்று இயக்குநர் ராஜமவுலி கூறியதை, மகாபாரதம் திரைப்படமாக வருகிறது, இதனால் திராவிடர்கள் கதறுகிறார்கள் என்று விஷமத்தனமான தகவலை பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மகாபாரதம் 10 பாகங்களாக வரும் என்று ராஜமௌலி அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
