இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளம் பெண் ஒருவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் பெண் ஒருவரைத் தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பப்பு ஒரு பாப்பாவ தூக்கிட்டு சுத்துறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tn Modi followers Hosur.என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மே 11ம் தேதி பதிவிட்டுள்ளது. இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராகுல் காந்தியை “பப்பு” என்று பா.ஜ.க-வினர் கேலியாகக் குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில் ராகுல் காந்தி பெண் (பாப்பா) ஒருவரைத் தூக்கிக்கொண்டு சுற்றுகிறார் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். கமெண்ட் பகுதியில் ராகுல் காந்தியின் முழு நேர வேலையே இதுதான் என்பது போலவும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவி கிடைத்துவிட்டார் என்றும் விஷமத்தனமாக பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.

புகைப்படத்தில் உள்ள நபர் சற்று ராகுல் காந்தி போன்று தோற்றம் அளிக்கிறார். ஆனால் அது ராகுல் காந்தி இல்லை என்று தெரிந்தும் பதிவிட்டிருக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. ஏதோ திரைப்பட காட்சியை எடுத்து பகிர்ந்திருப்பது போல இருந்தது. எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் ஃபிப்டி ஷேட்ஸ் ஃப்ரீட் (Fifty Shades Freed) என்ற அமெரிக்கத் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி என்று தகவல் கிடைத்தது. அந்த படங்களை சற்று பெரிதுபடுத்தி பார்த்தபோது படத்தில் இருக்கும் நடிகரின் முகம் முழுமையாக தெளிவாகத் தெரிந்தது. அந்த படத்தில் நடித்த ஜாமி டோர்ணரைத்தான் ராகுல் காந்தி என்று தவறாகக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கின்றனர் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: ew.com I Archive 1 I eonline.com I Archive 2

இதன் மூலம் அமெரிக்கத் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சியை, ராகுல் காந்தி என்று விஷமத்தனமாக குறிப்பிட்டு பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்க திரைப்பட காட்சியை ராகுல் காந்தி என்று தவறாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading