FACT CHECK: இரட்டை இலை பேனரை தூக்கிப்பிடித்த ரஜினி… போட்டோஷாப் படத்தால் பரபரப்பு!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி பேனர் ஒன்றை ரஜினிகாந்த் தூக்கிப்பிடித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரஜினிகாந்த் “வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்ற பதாகையை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Breaking : சற்றுமுன் நடந்த சுர்ஜிக்கள் அட்டாக் . Breaking 🙂 Another surgical strike 🙂 கதம் கதம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Pappa Vetri என்பவர் 2021 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இந்த படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஆதரவை யாருக்கும் தரவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 6ம் தேதிக்கு முந்தைய நாள் இரவு அதாவது ஏப்ரல் 5ம் தேதி தனது வீட்டின் முன்பு இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி பேனர் பிடித்ததாக படம் பலராலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

குறிப்பிட்ட நாளில் ரஜினிகாந்த் இப்படி பேனர் பிடித்திருந்தால் அது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும். ஆனால் இல்லை. அதே நேரத்தில் முன்பு எப்போதாவது இப்படி பிடித்தாரா, அந்த படத்தை இப்போது வெளியிட்டுள்ளனரா என்று ஆய்வு செய்தோம்.

Archive

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு கொரோனாவுக்கு எதிராக நம்முடைய ஒற்றுமையின் வலிமையை உணர்த்தும் வகையிலும் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்க வீடுகளில் விளக்கேற்ற பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அதன் படி நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியபடி போஸ் கொடுத்த படங்கள் கிடைத்தன. இந்த படத்தை எடிட் செய்து அதிமுக-வுக்கு வாக்களிக்கும்படி பேனர் பிடித்தது போல மாற்றி பதிவிட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I dinamani.com I Archive 2

தொடர்ந்து இந்த புகைப்படம் பற்றி தேடிய போது முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. 2020 ஏப்ரல் 5ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2021 ஏப்ரல் 5ம் தேதி எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. 

இதன் அடிப்படையில் கொரோனா முன்கள பணியாளர்களை பாராட்ட 2020ம் ஆண்டு நடந்த விளக்கேற்றும் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எடிட் செய்து தற்போது தேர்தல் நேரத்தில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் பேனர் பிடித்தது போல பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இரட்டை இலை பேனரை தூக்கிப்பிடித்த ரஜினி… போட்டோஷாப் படத்தால் பரபரப்பு!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered