ராஜிவ் காந்தியும் சோனியா காந்தியும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் அப்படி இருக்கும் போது ராகுல் காந்தி எப்படி இந்துவாக இருக்க முடியும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி தான் அணிந்திருக்கும் பூணூலைக் காட்டுவது போன்ற படம் மற்றும் ராஜிவ் காந்தி - சோனியா காந்தி அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்பு பாதிரியார் ஒருவர் நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், "தாயும் தந்தையும் டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்களை கிறிஸ்தவ தம்பதிகள் என்று திருமணம் செய்துகொண்டனர். அப்படி இருக்கும்போது மகன் மட்டும் தன்னை இந்து என்று எப்படி குறிப்பிட முடியும். மிகப்பெரிய ஜோக்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "அம்மாவும் அப்பாவும் டெல்லி சர்ச்சில் பதிவு திருமணம் செய்து கிருஸ்தவ ஜோடி ஆனார்கள் இவர்களுக்கு பிறந்த மகன் எப்படி இந்து என்று சொல்லமுடியும்????" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Palanisamy என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சோனியா காந்தி எந்த மதத்தை பின்பற்றுகிறார் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த சூழலில், ராகுல் காந்தி பூணூலைக் காட்டுவது போன்ற படம் மற்றும் ராஜிவ் காந்தி - சோனியா திருமணம் டெல்லி தேவாலயத்தில் நடந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தேடிப் பார்த்தோம். ஆனால், புகைப்படம் பற்றிய தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. ராஜிவ் காந்தி - சோனியா திருமணம் வீடியோ யூடியூபிலேயே உள்ளது. எனவே, அதைத் தேடி எடுத்தோம்.

கருப்பு வெள்ளை வீடியோவாக ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. ஆடியோ அதில் இல்லை. அதில் திருமணம் எந்த முறைப்படி நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆனால், அரசு பதிவுத் திருமணம் போல இருந்தது. ராஜிவ் காந்தி வட இந்தியர்கள் (இந்துக்கள்) ஆடை அணிவது போன்று ராஜிவ் காந்தி - சோனியா ஆடை அணிந்திருந்தனர்.

என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் டெல்லியில் இந்திரா காந்தி இல்லத்தில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். சர்ச்சில் நடந்தது என்று குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive

சோனியாவின் பெற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்வதாக இருந்தால் தேவாலயத்தில் மட்டுமே செய்யப்படும். பொது இடங்களில் திருமணங்கள் நடத்திவைக்கப்படாது. வீடியோவில் தேவாலயத்தில் திருமணம் நடந்தது போன்று எந்த ஒரு காட்சியும் இல்லை. இதன் மூலம் ராஜிவ் காந்தி - சோனியா காந்தி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அடுத்தது ராகுல் காந்தி குறிப்பிட்ட சமூகத்தினர் அணிவது போன்ற பூணூலை அணிந்து, அதை பொது இடத்தில் தூக்கிக் காட்டுவது போன்ற படத்தை ஆய்வு செய்தோம். அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, நான் கிழிந்த ஜிப்பாவைத்தான் போட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று ராகுல் காந்தி ஒரு முறை கூறி, பாக்கெட் கிழிசலாக இருப்பதைக் காட்டியதாகச் செய்திகள் கிடைத்தன. மேலும், கிழிசலான ஆடை அணியும் ராகுல் காந்திக்கு புதிய ஆடைகளை பா.ஜ.க-வினர் வாங்கி அனுப்பினர் என்றும் செய்திகள் கிடைத்தன. இதன் மூலம் ராகுல் காந்தி பொது இடத்தில் பூணூலை உயர்த்திக் காட்டினார் என்று பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று உறுதியாகிறது.

Archive

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் கடவுளை வணங்க இந்தியாவில் உரிமை உள்ளது. கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவர் மனம் மாறி இந்துவாக மாறினால் அவர் இந்துவாகவே கருதப்படுவார். பெற்றோர் கிறிஸ்தவராக இருந்தார்கள் என்பதற்காக இவர் எப்படி இந்துவாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்ப முடியாது.

நம்முடைய ஆய்வில், ராஜிவ் காந்தி திருமண வீடியோ ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கிறிஸ்தவ முறைப்படி அந்த திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. ராகுல் காந்தி பூணூலை உயர்த்திக் காட்டும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் டெல்லியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராஜிவ் காந்தி - சோனியா திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்ததாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False