இந்தோ - சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் கார்டு பகுதியில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை! திமுகவுக்கு யாரும் நாட்டுப் பற்றை கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை; இந்தியா - பாகிஸ்தான் போரின்போது தமிழகத்தின் சார்பில் ரூ.6 கோடி நிதி வழங்கியது அப்போதைய கலைஞர் ஆட்சி; சீனப்போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி!" என்று இருந்தது.

அதற்குக் கீழே போட்டோஷாப் முறையில், "ஏன்டா கோமாளி சீனப் போர் நடந்தது 1962ல ... அண்ணாவின் ஆட்சியோ 1967 to 1969 வரை .. எப்படிடா உறுதுணையா இருந்திருப்பாரு" என்று இருந்தது. இந்த பதிவை RK Bharadwaj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தோ - சீனப் போரின் போது இந்திய அரசுக்கு உறுதுணையாக அண்ணா தலைமையிலான தமிழ்நாடு அரசு இருந்தது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. பார்க்க உண்மையானது போலவே உள்ளது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டு 2020ம் ஆண்டு நவம்பரில் வெளியானது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் சன் நியூஸில் நேரடியாக தேடுவது கடினமாக இருந்தது. எனவே, "திமுகவுக்கு யாரும் நாட்டுப் பற்றை கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை" என்று சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடிய போது உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.

அதில், "திமுகவுக்கு யாரும் நாட்டுப் பற்றை கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை; இந்தியா - பாகிஸ்தான் போரின்போது தமிழகத்தின் சார்பில் ரூ.6 கோடி நிதி வழங்கியது அப்போதைய கலைஞர் ஆட்சி; சீனப்போரின் போது திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் அண்ணா" என்று இருந்தது.

ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது போல இல்லை. மிகவும் தெளிவாக இருந்தது. எனவே, உண்மையில் சன் டி.வி இதை வெளியிட்டதா என்பதை பார்த்தோம். அப்போது, ஃபேஸ்புக்கில் அந்த பதிவு எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. எனவே, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு தலைமை நிர்வாகி மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

நம்மிடம் அவர், “இந்த நியூஸ் கார்டு ஓராண்டுக்கு முந்தையது. முதலில் தவறான தகவலுடன் வெளியாகிவிட்டது. உடனே விவரம் அறிந்து அதை மாற்றிவிட்டோம். ஆனால், பழைய தவறான நியூஸ் கார்டை சமூக ஊடகர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இது தவறான நியூஸ் கார்டு” என்றார்.

தி.மு.க-வுக்கு யாரும் நாட்டுப் பற்றை கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை என்று மு.க.ஸ்டாலின் எப்போது பேசினார் என்று தேடினோம். இது தொடர்பாக சன் நியூஸ் வெளியிட்டிருந்த வீடியோவும் நமக்குக் கிடைத்தது. 2020ம் ஆண்டு நவம்பர் 28ம் அந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. தமிழகம் மீட்போம் என்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வீடியோவின் 2.08வது நிமிடத்தில் தேசப் பற்று பற்றி யாரும் கற்றுத் தரத் தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்குகிறார். அதில், தனித் தமிழ் நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார் என்றுதான் சொல்கிறார். முதலமைச்சராக இருந்தார் என்றோ, அண்ணாதுரை தலைமையிலான அரசு ஆதரவு அளித்தது என்றோ குறிப்பிடவில்லை.

நம்முடைய ஆய்வில், சன் நியூஸ் தொலைக்காட்சி தவறான நியூஸ் கார்டு வெளியிட்டுவிட்டு பிறகு அதை மாற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனப் போரின் போது இந்திய அரசுக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறவில்லை என்பது மு.க.ஸ்டாலின் பேச்சு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் “சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீனப் போரின் போது தமிழக முதல்வராக அண்ணா இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False