
1947ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு இந்தியாவில் புழக்கத்திலிருந்தது என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “1947ம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி படத்துடன். அதிகம் பகிருங்கள்” என்று இருந்தது. இந்த பதிவை Vishwa Ramana என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 செப்டம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943ம் ஆண்டு நாடு கடந்த இந்திய அரசை அமைத்து, அதன் பிரதமரானார். இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி, இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்துடன் போர் புரிந்தார். அப்போது ஆசாத் இந்த் என்று வங்கி ஒன்றை ஆரம்பித்து ரூபாய் நோட்டுகளை வெளியிட்டார். அந்த ரூபாய் நோட்டை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு ஏற்கவில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக உள்ளது. இந்த சூழலில் 1947ம் ஆண்டின் இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி புகைப்படத்துடன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அந்த ரூபாய் நோட்டுக்களை அகற்றிவிட்டது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்தவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.
ஆசாத் இந்த் வங்கி 1943ம் ஆண்டு தற்போதைய மியான்மர் நாட்டின் தலைநகரான யங்கூனில் தொடங்கப்பட்டது. அந்த வங்கி சார்பில் கடன் உறுதி நோட்டு (Promissory note) வெளியிடப்பட்டது. ரூ.10 தொடங்கி, ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதை இந்திய அரசு எப்போதும் ஏற்றுக்கொண்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை.
1940களில் ஆசாத் வங்கி வெளியிட்ட கடன் உறுதி நோட்டுக்களை வாங்கியவர்கள், தங்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு கூட அது போன்ற கோரிக்கை வெளியானது. ஆனாலும் அந்த ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை.
இந்திய அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக ஆய்வு செய்தோம். 1934ம் ஆண்டு வெளியான ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 22 இந்திய ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஆசாத் இந்த் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்காது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ரூபாய் நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று இல்லை. நேதாஜி புகைப்படத்துடன் ஹிந்துஸ்தான் ஜெய் ஹிந்த் என்று இருந்தது. இதன் மூலம் இது நேதாஜியின் ஆசாத் இந்த் வெளியிட்ட ரூபாய் நோட்டு என்று தெரிந்துகொள்ள முடிகிறது. இதை உறுதி செய்ய, 1947ல் நேதாஜி புகைப்படத்துடன் 10 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: rbi.org.in I Archive
ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் 1947ல் வெளியான ரூபாய் நோட்டுக்கள் பற்றித் தேடினோம். அப்போது, 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, 1950 ஜனவரி 26ம் தேதி இந்தியா குடியரசு என்று அறிவிக்கப்படுவது வரையிலான இடைக்கால அரசு ஆட்சிக் காலத்தில் பழைய இங்கிலாந்து ஆட்சியின் போது நடைமுறையிலிருந்த ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டது. இடைக்கால ஆட்சியின் போது, புதிய ஒரு ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்களும் வெளியிடப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவற்றில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் புகைப்படத்துடன் எந்த ரூபாய் நோட்டும் இல்லை.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாடு கடந்த இந்திய அரசை அமைத்ததும் இங்கிலாந்துடன் போர் அறிவித்தார். அப்படி இருக்கையில் அவருடைய புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டை இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்க வாய்ப்பு இல்லை.
நம்முடைய ஆய்வில், 1947ல் இங்கிலாந்து ஆட்சியின் போது தொடரப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்து, அதன் அடிப்படையில் ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
1947க்கு முன்போ, பின்போ நேதாஜி புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேதாஜி புகைப்படத்துடன் ரூபாய் நோட்டுக்களை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்த வருவதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், 1947ல் பயன்பாட்டிலிருந்த நேதாஜி புகைப்படத்துடன் கூடிய இந்திய ரூபாய் நோட்டு என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
1947ம் ஆண்டு இந்தியாவில் நேதாஜி புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு பயன்பாட்டில் இருந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:1947ல் நேதாஜி புகைப்படத்துடன் ரூபாய் நோட்டு வெளியானதா?
Fact Check By: Chendur PandianResult: False
