
பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
யூடியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தைத் தொகுப்பாளர் காண்பித்து கேள்வி எழுப்புகிறார். என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறுவது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “பிரபாகரன் இவர் நெஞ்சில் படுத்துத் தான் தூங்குவாராம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை கலைஞர் பாசறை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 பிப்ரவரி 19ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி நாம் தமிழர் கட்சித் தலைவர் பல விஷயங்களைக் கட்சி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பகிர்ந்து வருகிறார். அவரது கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எதிர் தரப்பினர் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தன் மார்பில் பிரபாகரன் படத்து தூங்குவார் என்று சீமான் கூறியது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெட்டி ஒட்டப்பட்டது போல உள்ளது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை வெளியிட்ட ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் சீமான் அளித்த பேட்டி வீடியோவை தேடி எடுத்தோம். 16 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை பார்த்தோம். வீடியோவின் 5.58வது நிமிடத்தில் “காலை நேரங்களில் அல்லது மதியத்தில் என் மார்பில் தூங்குவார்” என்று சீமான் கூறிய காட்சிகள் வந்தது.
அதற்கு முந்தைய பகுதியைப் பார்த்தோம். 5.43வது நிமிடத்தில் தொகுப்பாளர், “உங்கள் மகனைப் பார்க்காமல் இவ்வளவு நாள் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் நினைவு அடிக்கடி வருகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குத்தான் என் மகன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறியது தெரிந்தது.
அடுத்ததாகப் பிரபாகரன் படத்தைத் தொகுப்பாளர் காட்டும் பகுதியைப் பார்த்தோம். 8.46வது நிமிடத்தில் அந்த பகுதி வருகிறது. பாருங்க எங்க ஆளு என்று சீமான் கூறுகிறார். அதைத் தொடர்ந்து தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார், அதற்கு சீமான் பதில் அளிக்கிறார். 9.56 வது நிமிடத்தில் அவர் ரொம்ப நல்லவர் என்ற பகுதி வருகிறது. அங்கு எந்த இடத்திலும் பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறவில்லை. இதன் மூலம் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது தவறானது என்பது தெளிவானது.
நம்முடைய ஆய்வில், சீமான் தன்னுடைய மகன் பற்றிக் கூறியதை எடிட் செய்து எடுத்து, பிரபாகரன் படத்தைக் காட்டிய பிறகு பேசியது போன்று மாற்றி ஒட்டி விசமத்தனமாக வீடியோ உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தன் மகன் தன் மார்பில் படுத்து தூங்குவார் என்று சீமான் கூறியதை, பிரபாகரன் தன் மார்பில் படுத்து தூங்குவார் என்று கூறியது போன்று மாற்றி, எடிட் செய்து வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
