கேரளாவில் அதிசய உயிரினம் சிக்கியதாகவும், அதை பல லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க அமெரிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I online50media.com I Archive 2

கேரளாவில் சிக்கிய அபூர்வ உயிரினம் என்ற புகைப்படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. "அதிர்ச்சியில் இந்திய அரசு | கேரளாவில் சிக்கிய இந்த விசித்திர உயிரினம் | விலைக்கு வாங்கும் அமெரிக்கா" என்று அந்த செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

online50media.com என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியை கலை நிகழ்ச்சிகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 28 அன்று பகிர்ந்திருந்தது. ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் சிக்கிய அபூர்வ உயிரினம், பல லட்சம் கோடிக்கு இதை வாங்க அமெரிக்கத் தயாராக உள்ளது என்று எல்லாம் குறிப்பிடவே இது என்ன என்று பார்த்தோம். செய்தியை கிளிக் செய்து பார்த்தபோது, தலைப்பு மற்றும் லீட் மட்டும் இருந்தது. இதனுடன் ஒரு யூடியூப் வீடியோவை எம்பெட் செய்திருந்தனர். அந்த வீடியோவைப் பார்த்தோம்.

அதில், "புகைப்படத்தில் கண்டுகொண்டிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லையாம். இதன் ஸ்டெம்செல்லை எடுத்து ஆராய்ந்த போது அது 1000ம் ஆண்டுக்கு முற்பட்டதாம். பூமியிலிருந்த எந்த ஒரு உயிரினத்தின் செல்லோடும் ஒத்துப்போகவில்லை. நாம் உண்ணும் எதையும் அது உண்பது இல்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலைக் கிரகித்துக்கொள்கிறதாம். இரவில் பறக்கிறதாம். இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த தகவலை வெளியே சொன்னால் மக்கள் பீதி அடைவார்கள் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம்.

அடுத்த வாரம் நாசாவில் இருந்து வருகிறார்களாம். இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். 7.500 (???) ட்ரில்லியன் டாலர்களை இந்தியாவுக்குக் கொடுக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாம். 18.575 ட்ரில்லியன் டாலர்களை இந்தியா கேட்கிறதாம். இந்த தொகை கிடைத்தால் இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆக ஆகிவிடுவார்களாம். இந்த அதிசய உயிரினம் கேரளா மீளாம்பூரில் சிக்கியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வீடியோ 2018ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. பல லட்சக் கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த வீடியோவில் உள்ள விசித்திர உயிரினத்தின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, Laira Maganuco என்ற ஃபேஸ்புக் பதிவர் இந்த விசித்திர உயிரினத்தின் படங்களை 2018 மார்ச் 13ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், "ஹைபிரிட் பெண் எலி. ஒரே சிலை. 72 செ.மீ. முழுக்க முழுக்க சிலிக்கானால் உருவாக்கப்பட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த Laira Maganuco என்று பார்த்தபோது, இது போன்ற விசித்திரமான பொம்மைகளை செய்து விற்பனை செய்து வருபவர் என்று தெரிந்தது. இது போன்று நூற்றுக் கணக்கான பொம்மைகளை அவர் செய்து விற்று வந்திருப்பது அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் போது தெரிந்தது. இந்த பொம்மையின் புகைப்படங்கள், வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சிலிக்கான் பொம்மை படத்தை வைத்து 1000ம் ஆண்டுகளாக உயிரி வாழும் அதிசய உயிரினம் சிக்கியது என்று கதை விட்டிருப்பது உறுதியாகிறது. தங்கள் யூடியூப், ஃபேஸ்புக் பக்கங்களுக்கு லைக், வியூ கிடைக்க அபூர்வமான விஷயம் என்று தவறான செய்திகளை பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், கேரளாவில் அதிசய உயிரினம் சிக்கியதாகப் பகிரப்படும் செய்தி மற்றும் யூடியூப் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சிலிகான் சிலை வடிவமைப்பாளர் உருவாக்கிய பொம்மையை வைத்து அபூர்வ உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது என்று தவறான செய்தி வெளியிட்டிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False