குண்டர்கள் நிறைந்த கட்சியே பாஜக என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறினாரா?
பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கட்டமைக்கப்பட்ட குண்டர்களின் கும்பல் என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கட்டமைக்கப்பட்ட குண்டர்களின் கும்பலாகும். கல்வி அறிவற்ற பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு விலகிய மற்றும் மூளை சலவை செய்யப்பட்ட முட்டாள்கள்: டிவிட்டரில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Jagir Usain என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 18ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்கைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவிப்பது வழக்கம். எல்லா அரசியல் கட்சிகளையும் விமர்சிப்பார். அதனால், பா.ஜ.க பற்றிய அவரது விமர்சனம் உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் மார்க்கண்டேய கட்ஜூ இப்படிக் கூறினாரா என்று அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். ட்விட்டரில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்ட பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது.
அதில், "என் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிடப்பட்ட இந்த ட்விட் பதிவுகள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. என்னுடைய உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட் @mkatju என்பதாகும். இந்த போலியான ட்விட்டர் அக்கவுண்ட்களில் என்னுடைய பெயரைக் கூட தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க தொடர்பாக கட்ஜூ கூறியதாக சொல்லப்படும் பதிவுகளை அவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தார்.
அவர் பா.ஜ.க-வை குண்டர்களின் கட்சி என்று கூறியுள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, அரசியல் கட்சியினரை அவர் குண்டர்கள் என்று விமர்சித்ததாக செய்தி கிடைத்தது. மேலும், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் குண்டர்களை வைத்துள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் என்ற தகவலும் கிடைத்தது. குறிப்பாக பா.ஜ.க-வை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நம்முடைய ஆய்வில், தன்னுடைய பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கைத் தொடங்கி, விஷமத்தனமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர் என்று மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவை நான் வெளியிடவில்லை என்று மார்க்கண்டேய கட்ஜூ ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் அடிப்படையில், பா.ஜ.க குண்டர்களின் கும்பல் என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாக பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, குண்டர்களின் கும்பல் என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:குண்டர்கள் நிறைந்த கட்சியே பாஜக என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False