
சர் என்றால், ‘நான் உங்களின் அடிமை’ என்று அர்த்தம் எனக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பத்திரிகையில் பிரசுரமான தகவலை புகைப்படமாக எடுத்துப் பகிர்ந்தது போல படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “படித்ததில் பிடித்தது! எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது. முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க வேண்டும்.
ஆனால் ஆங்கிலேயர் நமக்கு அளித்த அடிமை வார்த்தையை இன்று வரை பெருமையாக வழக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர். SIR…. சார்….
என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள். ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம். அதன் அர்த்தம் என்ன???
SLAVE I REMAIN… என்பதன் சுருக்கமே SIR… அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே.
ஒரு காலத்தில் அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார் (SIR)… முடிந்தவரை தயவுசெய்து இனிமேல் யாரையும் அப்படி அழைக்காதீர்கள். முயற்சி செய்து பார்ப்போம். இதை அதிகம் பகிரவும்” என்று இருந்தது.
இந்த பதிவை உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் RamaDass Gounder என்பவர் 2020 அக்டோபர் 15ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இங்கிலாந்து அரசர் அல்லது அரசி அந்நாட்டில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கும் மிக உயரிய பட்டம் சர், மேடம். அதை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், சர்/சார், மேடம் என்பது தற்போது அனைவரையும் மரியாதையுடன் அழைக்கும் சொல்லாக மாறிவிட்டது. இது மரியாதை சொல் இல்லை, அடிமைத்தனம் என்ற வகையில் சிலர் புதிய அர்த்தம் கொடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive
சர்/சார் என்பதற்கும் புதுவித விளக்கம் – விரிவாக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்தியா என்பதற்கு I-Independent, N-Nation, D- Declared, I- In, A- August என அர்த்தம் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.
சர் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் விரிவாக்கம் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எதுவும் அதற்கு இல்லை. சர் என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான Sireல் இருந்து வந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். Sieur என்பதற்கு மாஸ்டர், லார்ட் போன்ற அர்த்தம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: oxfordlearnersdictionaries.com I Archive 1 I elitetitles.co.uk I Archive 2
சர் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரியில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். அப்போது சர் என்பது ஒருவரை மிகவும் மரியாதையாக அழைக்கும் சொல் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், சர் என்பது இங்கிலாந்து அரசு வழங்கும் மிக உயரிய பட்டங்களுள் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதாவது, இந்தியாவில் பத்மபூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி என்று பட்டங்கள் வழங்கப்படுவது போன்று இங்கிலாந்தில் வழங்கப்படும் பட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் சர் என்ற பட்டம் 14, 15ம் நூற்றாண்டிலேயே வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்தன. அதாவது இந்தியாவில் தங்கள் காலனி ஆதிக்கத்தை இங்கிலாந்து தொடங்குவதற்கு முன்பு இருந்தே இந்த படம் வழங்கப்பட்டு வருவது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: hindutamil.inI Archive 1 I roar.media I Archive 2
தற்போதும் கூட இங்கிலாந்தில் சர் பட்டம் வழங்கப்படுவதாகச் செய்திகள் கிடைத்தன. கடந்த 2017ம் ஆண்டு இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தி ஒன்றில், “பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது சேவை புரிந்த நபர்களுக்கு அந்நாட்டு ராணி சர் பட்டம் (நைட்ஹுட்) வழங்கி வருகிறார். இப்படி பட்டம் பெற்றவர்கள் திரு என்பதற்கு பதில் தங்கள் பெயருக்கு முன்பு சர் என போட்டுக்கொள்ளலாம்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக டி.என்.ஏ ஆய்வு நிபுணருமான சங்கர் பாலசுப்ரமணியனுக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் ஆங்கில பேராசிரியர் ஒருவரிடம் கேட்ட போது “அது வெறும் பட்டம் அவ்வளவுதான். அடிமை என்று எல்லாம் அர்த்தம் இல்லை” என்று முடித்துக் கொண்டார்.
பிரெஞ்சு வார்த்தையில் இருந்து சர் என்ற பெயர் வந்தது என்பதால், கல்லூரி ஒன்றில் ஃபிரெஞ்ச் ட்யூட்டராக பணியாற்றி வரும் சுசேரிடம் (susair) கேட்டோம். “இது இங்கிலாந்தில் அந்தக் காலத்தில் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயரிய பட்டம். தற்போது சிறந்த சேவை புரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு அடிமை என்று அர்த்தம் இல்லை. இதை எல்லோரும் பயன்படுத்துவது தவறு. எப்படி டாக்டர் என்று கூப்பிடுகிறோமோ அதே போல் சர் பட்டம் பெற்றவர்களை மட்டுமே தங்கள் பெயருக்கு முன்பு சர் போட்டுக் கொள்ள முடியும். எல்லோரையும் சர் அல்லது சார் என்று அழைக்க கூடாது.
இது ஃபிரெஞ்ச் வார்த்தையில் இருந்து வந்தது என்று சொல்வார்கள். பிரெஞ்ச் மொழியில் மிஸ்டர் என்பதை மிஸ்யர் என்று சொல்வார்கள். பிரெஞ்சு மொழி உச்சரிப்பு படி அதை கூறும்போது அதில் சர் என்பது இடம் பெற்றிருப்பது தெரியும். இதற்கு அடிமை என்றெல்லாம் அர்த்தம் இல்லை. சிலர் விவரம் தெரியாமல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்” என்றார்.
இதன் மூலம் சார் என்பதற்கு நான் உங்கள் அடிமை என்று அர்த்தம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சர் என்பதற்கு ‘நான் உங்கள் அடிமை’ என்று அர்த்தம் இல்லை என்பது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நடத்திய ஆய்வில் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சர் என்றால் ‘உங்களின் அடிமை’ என்று அர்த்தம் இல்லை!
Fact Check By: Chendur PandianResult: False
