வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடா;பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், "அண்ணா அறிவாலயம். வருங்கால சென்னை மேயர். செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ. நடிகை கீர்த்தி சுரேஷின் பொங்கல் க்ளிக்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகை கீர்த்தி சுரேஷ் திமுக தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பொங்கல் கொண்டாடியது போல சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வருங்கால சென்னை மாநகராட்சியின் மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் டிவி குறிப்பிட்டிருப்பதாக உள்ளது.

பார்க்க உண்மையில் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே உள்ளது. "என்ன பழக்கம் சன் டிவி இதெல்லாம்?" என்று குறிப்பிட்டு பலரும் இதை சமூக ஊடகங்களில் பகிர்ந்த வருகின்றனர். எனவே இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் சன் நியூஸ் இப்படி ஏதும் நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது 2024 ஜனவரி 16ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அந்த நியூஸ் கார்டில் "அண்ணா அறிவாலயம், வருங்கால சென்னை மேயர்" என்று இல்லை. சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடுத்து, போட்டோஷாப் மூலம் "அண்ணா அறிவாலயம், வருங்கால சென்னை மேயர்" என்று தட்டச்சு செய்து விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நமக்கு பதில் அளித்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வருங்கால சென்னை மாநகராட்சி மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சென்னை மாநகராட்சியின் வருங்கால மேயர் கீர்த்தி சுரேஷ் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered