
பத்திரிகையாளர்களை அவமதிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கிறோம் என தந்தி டிவி அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அண்ணாமலை புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை இனி தந்தி தொலைக்காட்சி புறக்கணிக்கும் – தந்தி தொலைக்காட்சி நிர்வாகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை Lion Balaji T Porur என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 அக்டோபர் 29ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பத்திரிகையாளர்களை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போது, இன்னும் ஆறு மாதங்கள் ஊடகங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றார். அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை கடுமையாக அவர் விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். அந்த விவகாரத்துக்குள் செல்லவில்லை.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களை அவமதிக்கும் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை இனி தந்தி டிவி புறக்கணிக்கும் எனத் தந்தி டிவி நிர்வாகம் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். எந்த ஒரு ஊடகமும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடாது. யார் விமர்சித்தாலும் செய்திகளை சொல்வது ஊடகத்தின் பணி. ஒருவேளை புறக்கணிக்கும் முடிவை எடுத்தாலும் பொது வெளியில் அதை ஊடகங்கள் சொல்லாது. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக சந்தேகம் எழவே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
இந்த நியூஸ் கார்டு தந்தி டிவி வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட், வடிவமைப்பு எல்லாம் வித்தியாசமாக இருந்ததால் இது போலியானதாக இருக்கும் என்று ஆய்வைத் தொடங்கினோம்.
தந்தி டிவி இப்படி ஏதும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். 2022 அக்டோபர் 28ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். ஆனால், அவற்றில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு இல்லை. அதே நேரத்தில், அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான செய்தியைத் தந்தி டிவி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. “பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதைத் தவறாக சித்தரித்துப் பரப்புகின்றனர்” என்று அண்ணாமலை அளித்த பேட்டி தொடர்பாக நியூஸ் கார்டு இருந்தது. இதன் மூலம் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைத் தந்தி டிவி புறக்கணிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
ஒரு வேளை புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, பின்னர் சமரசம் ஏற்பட்டு செய்தியாளர் சந்திப்புக்குச் சென்றுள்ளார்களா என்று அறியத் தந்தி டிவி-யின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்தார். அண்ணாமலையைப் புறக்கணிக்க முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைத் தந்தி டிவி புறக்கணிக்கும் என்று தந்தி டிவி நிர்வாகம் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்கிறோம் என தந்தி டிவி அறிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:அண்ணாமலையை புறக்கணிக்கிறோம் என்று தந்தி டிவி அறிவித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
