
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம். ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதில் மனு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Amirtharaj Nadar Ngl என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதம் செய்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருந்த சட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வாதம் செய்ததாக சிலர் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டை பரப்பவே அது பற்றி ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாகத் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இந்த தகவலும், நியூஸ் கார்டும் போலியானது என்று தெரிந்தது. இதை உறுதி செய்வதற்காக ஆய்வை தொடர்ந்தோம்.
முதலில் தந்தி டிவி இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். டிசம்பர் 7, 2022 தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. சற்று பின்னோக்கி சென்று பார்த்த போது டிசம்பர் 6ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது.
அந்த நியூஸ் கார்டில், “விலங்குவதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து மாற்றி, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம்” என்று மத்திய அரசு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு மற்றும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
