
‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வெளியிடும்படி தெரிவித்தார். இதன்பேரில் இதனை வாட்ஸ்ஆப் தவிர ஃபேஸ்புக் போன்ற பிற சமூக வலைதளத்தில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம்.
அப்போது பலர் இதனை பகிர்ந்து வருவதைக் கண்டோம்.
ஃபேஸ்புக் பதிவு லிங்க் இதோ…
அக்டோபர் 2ம் தேதி முதலாக, இந்த செய்தி உண்மை என நம்பி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை அறிவோம்:
கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் ஊராட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தினார். ஏராளமான கிராம மக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தை நடத்தியதற்காக, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் தகவலுக்கு…
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தியதன் முடிவுகள் வெளியாகின. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக, ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன.
கூடுதல் தகவலுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளை பார்க்கவும்…
இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட தகவல், தந்தி டிவி பெயரில், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் பெயரில், நாம் தந்தி டிவியின் ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’இது தவறான தகவல். இதுபற்றி நாங்கள் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளோம்,’’ என்றார்.
தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த பதிவை கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதற்கான பரிசோதனை நடத்தியுள்ளார். அதில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2) தடையை மீறி மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்தினார். அதனையும், அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையையும் இணைத்து சிலர் இவ்வாறு தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
3) மு.க.ஸ்டாலின் பற்றி தங்களது பெயரில் பரவும் செய்தி போலியான ஒன்று என தந்தி டிவி மறுப்பு தெரிவித்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா?- தந்தி டிவி பெயரில் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
