
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது, குடும்ப அட்டை வேண்டாம் என எழுதிக்கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சீமான் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நியாயவிலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். நாம் தமிழர் கட்சியினர் குடும்ப அட்டை வேண்டாம் என எழுதிக்கொடுக்க வேண்டும். சீமான்” என்று இருந்தது.
இந்த பதிவை சாவர்க்கர் பேரன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நியாயவிலைக்கடைகளில் நாம் தமிழர் கட்சியின் பொருட்கள் வாங்கக் கூடாது என்று சீமான் கூறியதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டு தமிழ் ஃபாண்ட், டிசைன் என அனைத்தும் தந்தி டிவி வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. யாரோ விஷமத்தனமாக நியூஸ் கார்டை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. இதையும் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் தந்தி டி.வி-யில் சீமான் தொடர்பான நியூஸ் கார்டு வெளியானதா என்று பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி இல்லை. எனவே, ஜனவரி 11ம் தேதியிலிருந்து வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு தந்தி டிவி வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. அதில் ஃபேக் நியூஸ் என்று முத்திரை குத்தி இதைப் பகிர்ந்திருந்தனர். இதன் மூலம் தந்தி டிவி இதை வெளியிடவில்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக சீமான் இப்படி எங்காவது பேசினாரா என்று பார்த்தோம். சீமான் அப்படிப் பேசியிருந்தால் அனைத்து ஊடகங்களிலும் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். தந்தி டிவி கூட செய்தி வெளியிட்டிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தி, வீடியோ, சமூக ஊடக பதிவு நமக்கு கிடைக்கவில்லை. எனவே, இதை நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கு அனுப்பிக் கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நியாயவிலைக்கடையில் பொருட்கள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று சீமான் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாம் தமிழர் கட்சியினர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
