காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு அருகே வருவதால் இன்று இரவு செல்போன்களை பயன்படத்த வேண்டாம் என்று ஒரு வதந்தி பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு பதிவு ஒன்றை அனுப்பி அது பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதில், "இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதால், இன்றிரவு 12.30 தொடக்கம், 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் NASA செய்தி அறிவித்துள்ளது. உடனடியாக பகிர்ந்து உங்கள் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்க" என்று இருந்தது.

ஃபேஸ்புக்கில் இந்த பதிவை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். Ganesh K என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 19ம் தேதி இதை பகிர்ந்திருந்தார். இவரைப் போல பலரும் பல ஆண்டுகளாக இந்த பதிவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:

இன்று இரவு காஸ்மிக் கதிர் பூமியை கடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். எந்த தேதியில் இது நடக்கிறது என்று குறிப்பிடவில்லை. இதன் காரணமாக 2011ம் ஆண்டில் இருந்து இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. தேதியை குறிப்பிடாதது வதந்தியைப் பரப்ப சௌகரியமாக அமைந்துள்ளது. காஸ்மிக் கதிர்வீச்சு பூமியை தாக்கும் என்று ஏதேனும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று தமிழில் கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடிப் பார்த்தோம். அப்போது, 2011ம் ஆண்டிலேயே இந்த வதந்தி பரவியது தொடர்பாக செய்திகள் நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று, உண்மையில் நாசா இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டதா என்று பார்த்தோம். ஆனால் நாசாவோ, சிங்கப்பூர் ஊடகமோ இது போன்று எந்த ஒரு செய்தியையும் வெளியிட்டதாக நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. காஸ்மிக் கதிர்கள் என்பது கதிர்வீச்சு தன்மை கொண்டது, தினமும் விண்வெளியில் அது வந்துகொண்டே தான் இருக்கிறது. ஒளியின் வேகத்தில் அது பயணிக்கிறது. பூமியின் காற்று அடுக்குகள் அதை தடுக்கின்றன என்று நாசா வெளியிட்டிருந்த குறிப்பு கிடைத்தது. காஸ்மிக் அலையால் செயற்கைக்கோள்கள் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அதில் காஸ்மிக் அலை வந்து பூமியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று எந்த ஒரு தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை. அதே நேரத்தில் இந்த தகவல் தவறானது என்று ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக்தான் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: nasa.gov I Archive 1 I news18.com I Archive 2

காஸ்மிக் கதிர் வீச்சு தொடர்பாக ஆய்வு செய்தோம். காஸ்மிக் கதிர் அல்லது அண்டக் கதிர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. அண்டத்திலிருந்து வருவதால் அதற்கு அண்டக் கதிர் என்று பொதுவான பெயர் சூட்டியுள்ளனர். இது அதிக கதிர்வீச்சு தன்மை கொண்டது. தினம் தினம் பூமியை நோக்கி காஸ்மிக் கதிர் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நம்முடைய பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பாதுகாப்பு கவசம் காஸ்மிக் கதிர் வீச்சை தடுத்து பூமியை காக்கிறது என்று தகவல் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: esa.int I Archive

மேலும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் விண்வெளியில் கதிர்வீச்சு 700 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதுவே பூமிக்கு மிக அருகில் அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் பகுதியில் 250 மடங்காக இருக்கும். விமானம் பறக்கும் உயரத்தில் 40 மடங்காக இருக்கும், உயர்ந்த மலை சிகரங்கள் பகுதியில் 2 மடங்காக இருக்கும், சமதளத்தில் அது ஒரு மடங்காக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் விண்வெளியில் எப்போதும் காஸ்மிக் கதிர்வீச்சு இருந்துகொண்டே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நம்முடைய ஆய்வில், பல ஆண்டுகளாக காஸ்மிக் கதிர்வீச்சால் பூமியில் செல்போன் பாதிக்கப்படும் என்ற வதந்தி பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் காஸ்மிக் கதிர் வீச்சு தினந்தோறும் பூமிக்கு வருகிறது. பூமியின் பாதுகாப்பு அமைப்பு அதை தடுத்துவிடுகிறது. பூமிக்குள் நுழையும் காஸ்மிக் கதிர்களும் சிதைந்துவிடுகின்றன என அறிவியல் தெளிவு படுத்தியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளோம். இதன் அடிப்படையில் காஸ்மிக் கதிர் அலை பூமியை தாக்குகிறது என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பூமிக்கு அருகில் காஸ்மிக் கதிர் செல்வதால் செல்போனை ஆஃப் செய்ய வேண்டும் என்று பரவும் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காஸ்மிக் கதிர் இன்று பூமியை கடப்பதால் செல்போன் பாதிக்கப்படும் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False