
மருத்துவமனை வேண்டாம், ராமர் கோயில்தான் வேண்டும் என்று கோஷமிட்ட நபர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புகைப்படம் ஒன்றில் இந்தி மற்றும் தமிழில் டைப் செய்யப்பட்டு பதிவிடப்பட்டு இருந்தது. அதில், “இவர் தான் எங்களுக்கு மருத்துவமனை வேண்டாம் கோயில்கள் தான் வேண்டும் என்று கூவியவன் இவன் ஆக்சிஜன் இல்லாமல் லக்னோவில் மரித்து போனான்….” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், “இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள், பகுத்தறிவு வளரட்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Santosh Kumarg என்பவர் 2021 மே 26 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் இருக்கும் நபர் அவ்வளவு பிரபலமானவர் இல்லை. ஆனால் மருத்துவமனை வேண்டாம், கோவில்தான் வேண்டும் என்று கூறியவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. யார் இவர் என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த நபர் இறக்கவில்லை என்று சில செய்திகளும், இவர் 2019ம் ஆண்டு கோவில்தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பியது தொடர்பான வீடியோ பதிவுகளும் கிடைத்தன.
முதலில் இந்த நபர் கோஷமிட்ட வீடியோவை தேடினோம். அந்த நபரின் பிரபலமான வாக்கியமான “we want the mandir first” என்று யூடியூபில் டைப் செய்து தேடினோம். அப்போது அந்த நபரின் வீடியோ கிடைத்தது. 2019ம் ஆண்டு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று டெல்லியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பிரம்மாண்ட பேரணியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது.
அதில் அவர், “கோவில் வேண்டும், கோவில் வேண்டும், எங்களுக்கு சாலைகள் வேண்டாம், எங்களுக்கு உணவு வேண்டாம், எங்களுக்கு முதலில் கோவில்தான் வேண்டும்” என்று உணர்ச்சி பெருக்கில் கத்துகிறார்.
அந்த வீடியோவில் Scoop Whoop லோகோ இருந்ததால் அசல் வீடியோவையும் தேடி எடுத்தோம். அவர் கோஷமிடும் ஒரு சில விநாடிகள் மட்டுமே வீடியோவில் காட்டப்படுகிறது. அதில் அவர் எங்களுக்கு மருத்துவமனை வேண்டாம் என்று கூறவில்லை. சாலை, உணவு வேண்டாம் என்று மட்டுமே கூறுவது தெரிந்தது. இதன் மூலம் இந்த நபர் மருத்துவமனை வேண்டாம் என்று கூறவில்லை என்பது தெரிந்தது.
அடுத்தது இந்த நபர் எங்கு உள்ளார், எப்படி உள்ளார் என்று ஆய்வு செய்தோம். அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி பிரிவு சார்பில் படத்தில் உள்ள நபரிடம் பேசி அவர் நலமுடன் உள்ளார் என்று உறுதி செய்திருப்பது தெரிந்தது. எனவே, மராத்தி பிரிவின் உதவியை நாடினோம்.
அவர்கள், முதலில் படத்தில் உள்ள நபரின் பெயர் ஜித்து குப்தா. இவர் டெல்லியில் உள்ளார். இவர் இறந்துவிட்டார் என்று விஷமிகள் வதந்தி பரப்பியதைத் தொடர்ந்து அவரது நண்பர் ரவீந்தர் சிங் நெகி என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ரவீந்தர் சிங் நெகியை தொடர்புகொண்டு ஜித்து குப்தாவின் தொலைபேசி எண்ணை வாங்கினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஜித்து குப்தாவை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “நான் நலமுடன் உள்ளேன். இந்த வதந்தி பரவியதைத் தொடர்ந்து குடும்பத்தில் அனைவரும் நிம்மதி இன்றி தவிக்கிறோம். பலரும் போன் செய்து என்னுடைய உடல் நலம் பற்றி விசாரித்து வருகின்றனர். வதந்தி பரப்பியவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார் என தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் சாலை வேண்டாம், கோவில்தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபர் லக்னோவில் வசிக்கவில்லை, அவர் டெல்லியில் வசிக்கிறார் என்பதும், அவர் கொரோனா தொற்று காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துவிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்றும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மருத்துவமனை வேண்டாம் கோவில்தான் வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கோஷம் எழுப்பிய நபர் கொரோனாவுக்கு பலியாவிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மருத்துவமனை வேண்டாம், கோயில்தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபர் கொரோனாவுக்கு பலியா?
Fact Check By: Chendur PandianResult: False
