FACT CHECK: சென்னை வெள்ள பாதிப்பு என்ற பெயரில் தவறான வீடியோக்கள் பரவுவதால் குழப்பம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

சென்னையின் வெள்ள பாதிப்பு என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டோடும் விகடன் வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை சைதாப்பேட்டை பாலம் இன்றைய நிலை-திமுக அரசு கதறல் ,தமிழகம் தத்தளிப்பு ! சென்னையை காப்பற்ற முடியாத திமுகவிற்கு எதிர்வரும் தமிழக மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது தமிழக மக்கள் ஆவேசம் !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Coimbatore BJP என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 நவம்பர் 9ம் தேதி பதிவிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook 

அதே போன்று சித்தர் நெறி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sathiyanarayanan என்பவர் வீடியோ பதிவு ஒன்றை நவம்பர் 9, 2021 அன்று பதிவிட்டிருந்தார். மழை வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் நிற்கும் பஸ்ஸின் மேற்கூரையில் இருந்து சிலர் குதித்து நீச்சல் அடிக்கின்றனர். பின்னணியில் “ஸ்டாலின்தான் வராரு…” பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், சிங்காரச் சென்னை??  ரோட்டுல  சொரவானம்  விடுரானுங்க 🤣  அடேய் ரெண்டு நாளா நீங்க பன்ற சேட்டை எல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காதுடா! #விடியலோ #விடியல்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை மழை வெள்ள பாதிப்பு என்று பழைய படங்கள், வீடியோக்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை பாலத்தில் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது எடுக்கப்பட்டது போல விஷமத்தனமாக சிலர் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம். 

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive

சைதாப்பேட்டை வீடியோவில் விகடன் டிவி லோகோ இருந்தது. எனவே, அதன் அடிப்படையில் யூடியூபில் விகடன் டிவி பக்கத்தில் தேடினோம். அப்போது, விகடன் டிவி வெளியிட்டிருந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டது போல் விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: ksrtcblog.com I Archive

அடுத்ததாக பஸ் மீது இருந்து வெள்ள நீரில் குதிக்கும் வீடியோவை ஆய்வு செய்தோம். பஸ்ஸில் KSRTC என்று இருந்தது. கேரள பஸ் என்பதால் இந்த வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ கேரள மாநிலம் நிலாம்பூர் என்ற இடத்தில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இது தொடர்பான செய்தி, வீடியோ நமக்குக் கிடைத்தன. 

இதன் மூலம் 2015ம் ஆண்டு வீடியோ, கேரளாவில் எடுக்கப்பட்ட வீடியோவை எல்லாம் 2021 சென்னை மழை வெள்ள காட்சி என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

பழைய, தொடர்பில்லா வீடியோக்களை 2021 சென்னை வெள்ள பாதிப்பு என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சென்னை வெள்ள பாதிப்பு என்ற பெயரில் தவறான வீடியோக்கள் பரவுவதால் குழப்பம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False