முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தொல் திருமாவளவன் கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தொல் திருமாவளவன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை 2024ல் தந்தி டிவி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுடன் இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. இன்று என்று குறிப்பிடப்பட்டிருந்த நியூஸ் கார்டில், “முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். வி.சி.க தலைவர் திருமாவளவன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், 

“அட நரம்பில்லாத நாக்கே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாதி – மத ரீதியான அணியுடன் கூட்டணியில்லை என்பதை 2011ம் ஆண்டே முடிவெடுத்துவிட்டோம். அந்த முடிவில் மாற்றம் இல்லை என்று தொடர்ந்து திருமாவளவன் கூறி வருகிறார். இதன் மூலம் பாமக இருக்கும் அணியுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக அவர் கட்சி தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், பாமக-வின் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான அணி தி.மு.க-வில் இணையும் என்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், யாரை கூட்டணியில் சேர்த்தாலும் தலையிட மாட்டோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று திருமாவளவன் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம். பாலிமர் வெளியிட்ட நியூஸ் கார்டு, செய்தியைத் தவறாக மாற்றி விஷமிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்களா என்று அறிய அது வெளியிட்ட செய்திகளைப் பார்த்தோம்.

அப்போது, திருமாவளவன் பேட்டி வீடியோவுடன் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், “தி.மு.க. கூட்டணியில் யாரை இணைத்தாலும் தலையிட மாட்டோம்.. முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்.. திருமாவளவன் அதிரடி அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தனர். அந்த வீடியோவை பார்த்தோம். வீடியோவில் எந்த இடத்திலும் முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று அவர் கூறவில்லை. எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று மட்டுமே கூறினார். அதாவது, சாதி, மத அடிப்படையிலான கட்சி இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற அர்த்தத்தில் அவர் கூறுவதைக் கேட்டோம். அதே நேரத்தில் தி.மு.க கூட்டணியில் யாரைச் சேர்க்க வேண்டும் என்பதை தி.மு.க தான் முடிவு செய்ய வேண்டும், அவர்களுக்கு அறிவுரை, ஆலோசனை கூறும் நிலையில் நாங்கள் இல்லை என்று அவர் கூறுகிறார்.

பாலிமர் டிவி வெளியிட்ட வீடியோ முழுமையானதாக இல்லை. எனவே, திருமாவளவனின் முழு பேட்டியையும் சன் நியூஸ் டிவியில் இருந்து எடுத்தோம். அதில், “2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் உறுதிப்படத் தெரிவித்த கூட்டணி நிலைப்பாடு, சாதிய மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். அந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் கூட்டணியிலும் இடம்பெற மாட்டோம் என்று அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக இருக்கிறோம்.

தி.மு.க கூட்டணியில் எந்த எந்த கட்சிகள் சேர வேண்டும் என்பது குறித்து தி.மு.க தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் இந்த கட்சியை சேர்க்க வேண்டும், இந்த கட்சியை சேர்க்கக் கூடாது என்று கூற எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்பதைத் தவிர, தி.மு.க-வுக்கு ஆலோசனை சொல்லக் கூடிய இடத்தில் அல்லது நெருக்கடி கொடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை.

எந்த ஒரு கட்சியின் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எங்களுக்கு இல்லை. கொள்கை சார்ந்து நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான்  என்னுடைய தலைமையை ஏற்றுக்கொண்ட கட்சித் தோழர்களிடம் என்னுடைய நம்பகத்தன்மையைக் காப்பாற்ற முடியும். பொது மக்களுக்கு இடையேயும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ள நம்பத்தன்மையைக் காப்பாற்ற முடியும். திமுக கூட்டணியை எதிர்க்கும் வலிமை எந்த கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் இல்லை” என்று கூறுகிறார். 

தி.மு.க கூட்டணியில் யாரைச் சேர்க்க வேண்டும் என்பதை தி.மு.க தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் கொள்கைக்கு எதிரான கட்சிகளைக் கூட்டணியில் இணைத்தால் 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவின்படி செயல்படுவோம் என்று திருமாவளவன் கூறியதைத் திரித்து தவறான அர்த்தம் வுரும் வகையில் தவறான செய்தியை பாலிமர் டிவி வெளியிட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

கூட்டணி தொடர்பாக மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று திருமாவளவன் பேட்டி அளித்ததாக பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தொல் திருமாவளவன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply