மோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’இளமைப் பருவத்தில் மோடி யோகா செய்யும் அரிய வீடியோ,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

நவம்பர் 24, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் வயதில் உள்ள ஒருவர் யோகா செய்யும் கறுப்பு, வெள்ளை வீடியோ காட்சியை இணைத்துள்ளனர். அதன் கீழே, ‘’நரேந்திர மோடி ஜி அவர்கள் இளம் வயதில் யோகாசனம் பயிற்சி செய்த காணொளி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ, கறுப்பு, வெள்ளையில் இருப்பதால், எப்படியும் ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாக இருக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபற்றி கூடுதல் தகவல் அறியும் நோக்கில், வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.

அப்போது, இதனை Iyengar & Krishnamacharya’s Yoga in 1938 எனும் தலைப்பில் ஒருவர் 2009ம் ஆண்டில் யூ டியுப்பில் பதிவேற்றம் செய்திருந்ததை கண்டோம். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வீடியோ பல ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்படும் ஒன்றாக உள்ளது சந்தேகமின்றி தெளிவானது. இருந்தாலும், இதனை கூடுதலாக உறுதிப்படுத்தும் நோக்கில், ஐயங்கார் மற்றும் கிருஷ்ணமாச்சார்யா என்பவர்கள் யார் என விவரம் தேடினோம். 

அப்போது, Krishnamacharya Yoga Mandiram என்ற யோகா அமைப்பு பற்றி விவரம் கிடைத்தது. அதன் நிறுவனர் கிருஷ்ணமாச்சார்யா, இதுபோன்ற யோகாசனங்களை செய்வதில் கை தேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களது இணையதள உதவியுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை (+91 44 2493 7998 / 3092, 2495 2900, +91 96000 98829) பயன்படுத்தி, சென்னை மந்தைவெளியில் உள்ள அவர்களது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்க தீர்மானித்தோம். ஒரு நாள் முழுவதும் முயன்றோம். அவர்கள் பல நேரம் ஃபோன் எடுக்காமலும், அப்படியே எடுத்தாலும் சரியான பதில் சொல்லாமலும் அலைக்கழித்து வந்தனர்.

இறுதியாக, இதில் இருப்பவர் BKS Iyengar, அவர் Krishnamacharya உடன் இணைந்து, அந்த காலத்திலேயே பலவிதமான யோகாசனங்களை செய்தும், மற்றவர்களுக்கு பயிற்றுவித்தும் வந்தார் எனக் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர்களது அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்திலும் கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டுள்ளதாக, தெரிவித்தனர். அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 45 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த வீடியோவில், முதலில் பிகேஎஸ் ஐயங்கார், பிறகு கிருஷ்ணமாச்சார்யா ஆகியோர் மிகவும் சிரமமான யோகாசனங்களை மிக எளிதாகச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, இந்த வீடியோவின் தொடக்கத்தில் பிகேஎஸ் ஐயங்கார் யோகா செய்யும் காட்சிகளை எடுத்து, நரேந்திர மோடி எனக் கூறி தற்போது வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

பிகேஎஸ் ஐயங்கார் தற்போது உயிருடன் இல்லை. இவர் கிருஷ்ணமாச்சார்யாவின் மாணவராக இருந்து யோகாசனங்களை கற்றுக் கொண்டு, அவர் போலவே யோகா துறையில் சிறப்பு பெற்று விளங்கினார் எனத் தெரியவருகிறது. அவர் அளித்த நேர்காணல் ஒன்றின் வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பிரதமர் மோடி இளமைக் காலத்தில் யோகா செய்யும் வீடியோ எனக் கூறி பகிரப்படுவது வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False