
உத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் போது இரும்பு கம்பிக்கு பதில் மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சிமெண்ட் சாலை அமைக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரும்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கில் கான்கிரீட் சாலை, எப்படி உ.பி.யின் வளர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பூங்கொடி என்பவர் 2020 நவம்பர் 23ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேசத்தில் நடந்தது என்று பல உண்மையான மற்றும் தவறான தகவல்கள் தமிழகத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் படம் என்று பகிரப்பட்டுள்ளது. இது உண்மையில் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த புகைப்படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்த ஒரு செய்தியும் தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வெளியான செய்திகளில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அங்கு மூங்கிலை வைத்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானதாக தெரிந்தது.
படத்தைப் பார்க்கும் போது நம் நாட்டில் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை. கட்டுமானப் பணியில் உள்ளவர், நடந்து வருபவரின் உடைகள் வங்கதேசம் அல்லது வியட்நாம் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது.
அதே நேரத்தில் கட்டுமானத்தில் கம்பிக்கு பதில் மூங்கிலைப் பயன்படுத்துவது அதிக பலனைத் தரும் என்ற வகையில் வெளியான பல கட்டுமான தொழில்நுட்பம் தொடர்பான வியட்நாம் செய்திகளில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவற்றில் இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.
அசல் பதிவைக் காண: civilengdis.com I Archive
தொடர்ந்து தேடியபோது 2015ம் ஆண்டு வங்கதேச நாட்டில் ஜகன்நாத்பூரில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற வகையில் செய்தி வெளியாகி இருந்தது. ஜகன்நாத்பூரில் கம்பிக்கு பதில் மூங்கில் குச்சிகளை வைத்து ஊழலில் ஈடுபட்ட அவாமிலீக் கட்சி நிர்வாகி என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: ajkershodesh.com I Archive
வங்கதேசத்தில் கம்பிகளுக்கு பதில் மூங்கிலை வைத்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது வழக்கமானது என்பது போல பல செய்திகள் கிடைத்தன. 2020ம் ஆண்டில் கூட கட்டுமானத்தில் கம்பிக்கு பதில் மூங்கில் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உ.பி உறுப்பினர் பதவி நீக்கம் என்று செய்தி வெளியாகி இருந்தது.
அசல் பதிவைக் காண: thehawabaaz.com I Archive I tbsnews.net I Archive 2
இந்த செய்தியில் உ.பி உறுப்பினர் கைது என்று இருந்தது. உபி என்றால் உபசிலா உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நம் ஊரில் வருவாய்த் துறையில் கோட்டம், வட்டம் என்று அழைப்பது போல வங்கதேசத்தில் உபசிலா என்று அழைக்கிறார்கள் என்று தெரிந்தது. இதை உபி உறுப்பினர் என்பதை உத்தரப்பிரதேசம் என்று இவர்கள் தவறாக நினைத்துவிட்டார்களோ என்னவோ…
நம்முடைய ஆய்வில்,
இந்த புகைப்படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்த புகைப்படம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகி இருப்பது கிடைத்துள்ளது.
கட்டுமான தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளில் இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருவதும் உறுதியாகி உள்ளது.
வங்கதேசத்தில் மூங்கிலைப் பயன்படுத்தி கட்டுமானப் பணி மேற்கொள்வது வழக்கமான ஒன்று என்றும் தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும்போது எடுத்தது என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குறிப்பிட்ட தகவல் தவறானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
