
கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையின் புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நெடுஞ்சாலையின் மறுமுனையில் நிலவு இருப்பது போன்று அழகிய படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலை ஒரு முழு பவுர்ணமி நாளில் புகைப்படம் எடுக்கப்பட்டது!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Prasanna Babu என்பவர் 2020 நவம்பர் 23ம் தேதி பகிர்ந்துள்ளார்.
Prasanna Babu மட்டுமல்ல இந்த படம் மற்றும் தகவலை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று பல படங்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, கோவை -ஊட்டி சாலையில் மான்கள் இளைப்பாறியதாகப் படங்கள் பகிரப்பட்டன. கடைசியில் அந்த படம் ஜப்பானில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அதே போல் மயில்கள் உலாவுகின்றன என்று கூட படம் பகிரப்பட்டது.
தற்போது நெடுஞ்சாலை, அதன் மறுமுனையில் நிலவு என அழகிய படம் பகிரப்பட்டுள்ளது. இந்த படம் உண்மையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது Voice of Macedonia என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் கிரீஸ் நாட்டின் மார்சிடோனியாவில் உள்ள வெரியா என்ற நகரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த புகைப்படத்தை Argiris Karamouzas என்பவர் எடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
Argiris Karamouzas, Veria, Macedonia, Greece ஆகிய கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது Architecture & Design வெரிஃபைடு பக்கத்தில் இந்த புகைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் புகைப்படத்தை எடுத்த Argiris Karamouzas இன்ஸ்டாகிராம் ஐடியையும் ஷேர் செய்திருந்தனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
Argiris Karamouzas இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது அவர் இந்த படத்தைப் பதிவிட்டிருந்தார். கிரேக்க மொழியில் வெளியிட்டிருந்த தகவலை மொழி மாற்றம் செய்து பார்த்த போது, வெரியா சமவெளியில் எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: instagram I Archive
அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, கிரேக்கத்தில் இந்த படத்துடன் பதிவிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. அதில், பலரும் இந்த படத்தை ஷேர், லைக் செய்து வருகின்றனர். இந்த படத்தின் உரிமையாளர் நான்தான், இதை நான்தான் எடுத்தேன் என்று கூறியிருந்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் இந்த புகைப்படம் கிரீஸ் நாட்டில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. கிரீஸ் நாட்டின் வெரியா சமவெளியில் எடுக்கப்பட்ட படத்தை கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலையின் புகைப்படம் என்று பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கிரீஸ் நாட்டில் எடுக்கப்பட்ட படத்தை கோவையில் எடுத்ததாக தவறான தகவல் சேர்த்து பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம்!
Fact Check By: Chendur PandianResult: False
