FACT CHECK: இவை நிவர் புயல் மீட்பு பணி படங்கள் இல்லை!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொண்டதாக பல படங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அப்படி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்ததாக பகிரப்படும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மழை, புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. மலையாளத்தில் பெயர் பலகை உள்ள மசூதியின் முன்பு சுத்தம் செய்கின்றனர்.. தேவாலயம் ஒன்றையும் சுத்தப்படுத்துகின்றனர். இவர்களின் சேவையைக் கண்டு மக்கள் கைக்கூப்பி நன்றி செலுத்துவது போன்று பல படங்கள் பகிரப்பட்டுள்ளன. 

நிலைத் தகவலில், “பெருமைக்கு சேவைசெய்யிற கூட்டமில்லடா இது… அதையே கடமையா நினைக்கிற கூட்டம் !

#எச்சமீடியாக்கள் கவனத்துக்கு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Suresh Sg என்பவர் 2020 நவம்பர் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிவர் புயல் கரையைக் கடந்ததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணியில் அரசுடன் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அவரவர் செய்யும் உதவிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அதில் எந்த தவறும் இல்லை, நாங்கள் செய்வதுதான் உயர்ந்த சேவை என்று ஒருவரை ஒருவர் விமர்சித்து பதிவிடும்போது அது பிரச்னையாகிறது.

இந்த பதிவில் பெருமைக்கு சேவை செய்வது இல்லை, அதைக் கடமையாக நினைத்து செய்யும் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் இந்த சேவை பணிகள் எங்கே, எப்போது, யாரால் செய்யப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் அரைக்கால் சட்டையே அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும், பதிவை வெளியிட்ட நபர் தன்னை ஆர்.எஸ்.எஸ் சேவகர் என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் தான் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்தார்கள் என்று புகழ்வது தெரிகிறது.

இது நிவர் புயலின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை என்றாலும் நிவர் புயல் கரையைக் கடந்த (2020 நவம்பர் 26) அன்று இந்த பதிவை வெளியிட்டுள்னர். இதன் மூலம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள் என்று சொல்வது போல உள்ளது. பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு கேரளா மழை வெள்ளத்தின் போது உதவி புரிந்ததாக செய்திகள் ட்விட்டர் பதிவில் இந்த படங்கள் ஷேர் செய்யப்பட்டிருந்தன.

அசல் பதிவைக் காண: Twitter 1 I Archive 1 I Twitter 2 I Archive 2

கேரளா வெள்ளத்துக்கு முன்பும் கூட இதில் உள்ள சில படங்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் சேவை என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. அதில் சாலை முழுக்க தண்ணீர் தேங்கியிருக்கும் படத்தில் சென்னை மாநகராட்சி என்று எழுதியிருப்பதை காண முடிகிறது. எனவே, எல்லா படங்களும் கேரளா வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டவை இல்லை என்பதும் தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Twitter 1 I Archive 1 I Twitter 2 I Archive 2

இதன் மூலம் கேரளாவில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை தற்போது வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. அதே நேரத்தில் இந்த படங்கள் நிவர் புயல் பாதிப்பு தருணத்தில் வெளியிடப்பட்டிருப்பதால் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்துக்கும் நிவர் புயல் நிவாரணப் பணிக்கும் தொடர்பில்லை. 

பதிவிட்டவர் இந்த புகைப்படங்கள் கேரளாவில் 2018ல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கலாம். அல்லது இவை பழைய படங்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம். புயல் பாதிப்பு சமயத்தில் மற்ற மதத்தினர், அமைப்பினர் உதவி செய்கிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரவும் நிலையில் இந்த உண்மையை மறைத்து பதிவை வெளியிட்டிருப்பது குழப்பதையே ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படங்கள் 2018 கேரள வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இவை நிவர் புயல் மீட்பு பணி படங்கள் இல்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context