
இந்தியாவின் அருணாசலப்பிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் சிறைபிடித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடித்து விரட்டி விட்டோம் சீன ராணுவத்தை அத்துமீறி எவன் என் எல்லையில் மிதித்தாள் இதுதான் கதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை தினேஷ் ஆப்பநாடு மறவன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா – சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் எப்போதும் நிலவுகிறது. இந்த நிலையில் 2022 டிசம்பரில் அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்துத் திருப்பி அனுப்பினார்கள் என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில், பழைய வீடியோக்களை எல்லாம் எடுத்து சீன ராணுவத்தைத் திருப்பி அனுப்பிய இந்திய ராணுவம் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சந்தேகத்திற்கு இடமான இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2020ம் ஆண்டிலேயே யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
Cdt Aniket Das, Haha.sofunnyy உள்ளிட்ட ஃபேஸ்புக் பக்கங்களில் இதே வீடியோ 2020ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அவற்றில், லடாக் பகுதியில் சீன வாகனத்தை இந்திய ராணுவம் கைப்பற்றியது. மேலும் சீன ராணுவ வீரரைக் கைது செய்தது என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து 2020ல் சீன மொழியில் வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: ettoday.net I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இந்த சம்பவம் இப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆனால், இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்த சூழலில் இந்த வீடியோ இப்போது நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 2020ல் நடந்த வீடியோ என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்!
முடிவு:
அருணாச்சலபிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீனர்களை விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள் என்று பரவும் வீடியோ 2020ல் லடாக் எல்லையில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அத்துமீறிய சீன ராணுவத்தை இந்திய வீரர்கள் தடுக்கும் இந்த வீடியோ 2022ல் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
