FACT CHECK: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதி அளித்ததா தி.மு.க?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என தி.மு.க கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஸ்டாலின் படத்துடன் மீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தேர்தலில் சொன்னது போல, நீட் தேர்வு ரத்து இல்லை, மாதம்தோறும் 1000 ரூபாய் இல்லை, ஜிஎஸ்டி ரத்து இல்லை, பெட்ரோல் டீசல் விலை குறைவு இல்லை, மதுவிலக்கு இல்லை, நகைக்கடன் தள்ளுபடி இல்லை, சிலிண்டர் விலை குறைப்பு இல்லை, வீட்டில் ஒருவருக்க அரசு வேலை இல்லை. உங்கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் பாஸ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Saravanan Swamy S என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 ஜூன் 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தி.மு.க, பால் கட்டணம் குறைப்பு, அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரணமாக ரூ.4000ம் என தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியுள்ளது. நீட் தேர்வை சட்ட ரீதியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறது. நகைக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இப்போது முடியாது, ஆனால் நிதி நிலை சீரான பிறகு குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சூழலில் தி.மு.க தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா நிறைவேற்றாதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறியது போல, நீட் தேர்வு ரத்து இல்லை என்று அறிவித்ததா, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்பது உள்ளிட்டவை பற்றி மட்டுமே ஆய்வு செய்தோம்.

தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 505 விஷயங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் ஏழு உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தது. இந்த 505ஐ வாக்குறுதிகளையும் ஒரே நாளில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலர் மனதில் உள்ளது. அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று நமக்கு புரியவில்லை.

அசல் பதிவைக் காண: dmk.in I Archive 1 I hindutamil.in I Archive 2

தி.மு.க தேர்தல் அறிக்கையில் 160 வாக்குறுதியாக, “கலைஞர் ஆட்சிக் காலத்தில் பள்ளி இறுதி வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன. தற்போதைய மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினைத் தட்டிப் பறித்திருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சட்டம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எந்த இடத்திலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு கூறவில்லை.

தி.மு.க தன்னுடைய 503வது வாக்குறுதியாக சமையல் எரிவாயு சிலிண்டர் மீது ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. அதே போல் 504வது வாக்குறுதியாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும். அதற்குள்ளாக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அசல் பதிவைக் காண: kalaignarseithigal.com I Archive

நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நகைக் கடன் தள்ளுபடி இல்லை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive

மதுக்கடைகள் மூடப்படுவது தொடர்பாக 2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க எதையும் குறிப்பிடவில்லை. டாஸ்மாக் உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும் தி.மு.க தலைவர்கள் தொடர்ந்து மதுவிலக்கு பற்றிப் பேசி வந்துள்ளனர். டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. 

அசல் பதிவைக் காண: news18.com I Archive 1 I hindutamil.in I Archive 2

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தி.மு.க தேர்தல் அறிக்கையை பார்த்தோம். அதில் அப்படி எந்த ஒரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்பது தெரிந்தது. மேலும், 2021 சட்டமன்ற தேர்தலின் போது இந்த வாக்குறுதியை அ.தி.மு.க வழங்கியது தெரியவந்தது. அ.தி.மு.க வழங்கிய வாக்குறுதியை தி.மு.க வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.

தி.மு.க தன்னுடைய எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது என்று அறிவிக்கவில்லை. தற்போது உடனடியாக செய்ய முடியாது என்று கூறியது உண்மைதான். இதன் மூலம் தி.மு.க தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று கூறியது போல பகிரப்படும் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்ந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதி அளித்ததா தி.மு.க?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False