
ஒடிஷா கோனார்க் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய உதய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சிவ லிங்கம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவிலில் 200 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம். கோவிலின் உள்ளே சூரியன் உதிப்பது.(2017)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஆன்மீக களஞ்சியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Santhikumar என்பவர் 2021 ஜனவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒடிஷாவில் உள்ள கோனார்கள் சூரிய கோவில் உலக புகழ் பெற்றது. அது சூரியன் கோவில் என்று கூறும் நிலையில், லிங்கம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் பின்புறம் திருப்பதி வெங்கடாசலபதி சிலை போல ஒன்று உள்ளது. சூரியன் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதாக எங்கும் படித்த நினைவு இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
கோனார்க் சூரிய கோவில் தொடர்பான பதிவுகள், புகைப்படங்களைப் பார்த்தோம். எதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று சிவலிங்கம் இல்லை. மேலும் 2017ம் ஆண்டில் 200ம் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும் நிகழ்ச்சி நடந்தது என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் தாய்லாந்தில் உள்ள அங்கோர்வாட் கோவிலில் சூரிய ஒளியை காணும் படத்தை வைத்து கோனார்க்கில் 200 ஆண்டுக்கு ஒரு முறை தெரியும் சூரிய ஒளி என்று வெளியான தவறான செய்திகள் மட்டுமே கிடைத்தன.
அசல் பதிவைக் காண: onetamilnews.com I Archive
எனவே, இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சமூக ஊடகங்களில் இந்த புகைப்படத்தை அழகான சிவலிங்கம் என்ற வகையில் பலரும் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. tripadvisor.com இணையதளத்தில் இந்த சிவலிங்கம் அமெரிக்காவின் சியாட்டலில் Issaquah என்ற இடத்தில் உள்ள நித்தியானந்தா இந்து ஆலயத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: tripadvisor.co.uk I Archive
இதன் அடிப்படையில் நித்தியானந்தா, சியாட்டல், Issaquah என கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது கைலாசா சியாட்டல், நித்தியானந்தேஷ்வரா இந்து ஆலயம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் 2012ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது நமக்கு கிடைத்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பலரும் இந்த லிங்கம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு வடக்கு கரோலினா நித்தியானந்தா சங்க ஒருங்கிணைப்பாளர் நித்தியா அமிர்தானந்தா மா என்பவர் பதில் அளித்திருந்தார். அதில், “இது ஐஸ் கட்டியில் செதுக்கப்பட்ட சிற்பம். சியாட்டல் கோவில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின்போது இந்த சிலையை உருவாக்குகிறது” என்று கூறியிருந்தார்.
இதன் மூலம், இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு கோனார்க் சூரிய கோவிலில் எடுக்கப்பட்டது இல்லை. 2012ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நித்தியானந்தா கோவிலில் உருவாக்கப்பட்ட ஐஸ் கட்டி சிவலிங்கம் என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் கோனார்க் சிவலிங்கம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஒடிஷா கோனார்க் கோவில் லிங்கம் என்று பகிரப்படும் படம் அமெரிக்காவில் உள்ள நித்தியானந்தா இந்து கோவிலில் உள்ள ஐஸ் லிங்கம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோனார்க் அதிசயம் என்று பகிரப்படும் அமெரிக்கா நித்தியானந்தா கோயில் சிவலிங்கம்!
Fact Check By: Chendur PandianResult: False
