குடகு மாவட்டத்தில் நர்ஸாக பணியாற்றியவர் அதே மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக உயர்ந்தார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாட்ஸ்அப் சாட்பாட்டுக்கு வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார்.

இளம் பெண் ஒருவர் நடந்து வர, அவருக்கு ஆண்களும் பெண்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பலரும் அவருடைய காலில் விழுந்து ஆசி பெற முயற்சிக்கின்றனர்.

ஆங்கிலத்தில் இருந்த தகவலில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று குடகு மாவட்ட கலெக்டர் ஆனதாகவும், கொரோனா காலத்தில் அந்த அனுபவம் அடிப்படையில் சிறப்பான நடவடிக்கை எடுத்தார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

தமிழில் யாராவது இது போன்ற பதிவை பகிர்ந்து வருகிறார்களா என்று தேடினோம். அப்போது, "திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் நர்ஸ்.கொரோனா காலத்தில் குடகு மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்து அனைவரின் நன் மதிப்பைப்பெற்றவர். தற்போது அதே மாவட்டத்தில் ஆட்சியராக, வாழ்த்துக்கள் ஆட்சியே" என்று குறிப்பிட்டு பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இதை ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

இளம் பெண் ஒருவருக்கு நுழைவாயில் தொடங்கி கூட்ட அரங்கத்தின் உள்ளே நடந்து வரும் வரை பல ஆண்களும் சில பெண்களும் இருபுறமும் நின்றுகொண்டு அவருடைய பாதத்தைத் தொட்டு ஆசி பெற முயற்சிக்கின்றனர். அவரும் மிகவும் கூச்சத்துடன் அதைக் கடந்து செல்கிறார்.

இளம் பெண்ணுக்கு எதற்காக இத்தனை மரியாதை, அவர் கலெக்டராக இருந்தாலும் கூட இவ்வளவு மரியாதை தேவையா என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோ பற்றிய வதந்தி பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பது தெரிந்தது. அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டுத் தேடியபோது, ஒரு யூடியூப் லிங்க் கிடைத்தது.

அதில் சேஃப் ஷாப் டைமண்ட் லீடர் நசியாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டு இருந்தது. 2020 மார்ச் 5ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது இந்தியாவில் கொரோனாத் தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

சேஃப் ஷாப், நசியா ஆகிய கீ வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது, சேஃப் ஷாப் என்பது எம்.எல்.எம் போல பணம் கட்டி வாடிக்கையாளரை சேர்த்துவிடும் தொழில் என்று தெரிந்தது. மேலும், அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கமும் நமக்கு கிடைத்தது. சேஃப் ஷாப் மேடையில் அந்த பெண் இருக்கும் காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நமக்கு கிடைத்தன. எனவே, இந்த பெண் குடகு (கூர்க்) மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: instagram I Archive

தற்போது குடகு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் ஆனிஸ் கண்மணி ஜாய் பற்றிய தகவலைத் தேடினோம். அவர் செவிலியராக பணியாற்றி ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று தெரிந்தது. அவரைப் பற்றிய தகவலை எடுத்து, எம்.எல்.ஏ பெண்மணியின் வீடியோவுடன் சேர்த்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: kodagu.nic.in I Archive 1 I shethepeople.tv I Archive 2

நம்முடைய ஆய்வில்,

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள பெண் குடகு மாவட்ட கலெக்டர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இந்த பெண் சேஃப் சேல் என்ற மல்டி லெவல் மார்க்கெடிங் நிறுவனத்தின் பேச்சாளர் என்று உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் குடகு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மக்கள் நன்றியதாக பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வீடியோவில் இருக்கும் இளம் பெண், குடகு மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லை என்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:குடகு கலெக்டருக்கு மக்கள் நன்றி செலுத்தியதாகப் பரவும் தவறான வீடியோ!

Fact Check By: Chendur Pandian

Result: False