
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவி துப்பாக்கியுடன் கைது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மாணவி போன்று தோற்றமளிக்கும் இளம் பெண்ணின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து போலீசார் துப்பாக்கியை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “டெல்லி நேரு யூனிவர்சிட்டியில் கைத்துப்பாக்கியுடன் வந்த ABVPஅமைப்பை சேர்ந்த மாணவி படிக்கும் போதே மாணவர்களுக்கு வன்முறையை போதித்தால் நாட்டின் சமத்துவம் பாதிக்கப்படாதா.. அறநெறியை கற்பிக்க வேண்டிய ஆசான்கள் மாணவர்கள் மனதில் மதவெறியை விதைக்கலாமா.. மதநல்லிணக்கம் போற்றும் ஜனநாயக தேசமான இந்தியாவில் மதவெறியை ஊக்குவிப்பவர்களை ஒருநாளும் அனுமதிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Dhillu Dhinakaran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா என்று அறிய டெல்லி, ஜே.என்.யூ, மாணவி, துப்பாக்கி பறிமுதல் என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
எனவே, வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் ஆசிரியை ஒருவரிடமிருந்து போலீசார் துப்பாக்கியை கைப்பற்றினர் என்று செய்தி கிடைத்தது. இதன் அடிப்படையில் கூகுளில் மெயின்புரி, ஆசிரியை, துப்பாக்கி என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது.
என்.டி.டி.வி வெளியிட்டிருந்த செய்தியில், போலீசார் சோதனையிட்ட போது இளம் பெண் ஒருவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என தெரிந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மெயின்புரி போலீசார் இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ளார்களா என்று அறிய அதன் ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். இந்தியில் இரண்டு பதிவு வெளியாகி இருந்தது. அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது. இந்த தகவல் தவறானது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
கைது செய்யப்பட்ட பெண் மாணவியோ, ஆசிரியையோ இல்லை. அந்த பெண்ணின் பெற்றோர் இறந்துவிட்டனர். அதிக அளவில் சொத்துக்கள் உள்ளன. சொத்துக்கு ஆசைப்பட்டு யாராவது எதையாவது செய்துவிடுவார்கள் என்று அவர் பயப்படுகிறார். அதனால் பாதுகாப்புக்காக அவர் கையில் துப்பாக்கி வைத்துள்ளதாக மெயின்புரி கொத்வாலி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீஸ் நிலைய பொறுப்பாளர் அனில் சிங் இதை நம்மிடம் தெரிவித்துள்ளார்” என்றனர்.
இளம் பெண் ஒருவரிடமிருந்து போலீசார் கைத்துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்துள்ள வீடியோ உண்மைதான். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்று அந்த பெண் ஜேஎன்யூ மாணவி இல்லை, அவர் ஆசிரியையும் இல்லை. அவர் டெல்லியில் கைது செய்யப்படவில்லை. அவர் உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் துப்பாக்கியுடன் வந்த டெல்லி ஜேஎன்யூ மாணவி கைது என்று பகிரப்படும் தகவல் முழுக்க முழுக்க தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி துப்பாக்கியுடன் கைது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:துப்பாக்கியுடன் வந்த ஜேஎன்யூ ஏபிவிபி மாணவி கைது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
