FACT CHECK: குஷ்பு கைது வீடியோவை வைத்து வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது செய்யப்பட்ட வீடியோவை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

நடிகை குஷ்பு கைது செய்யப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நடிகை குஷ்பு விபச்சார வழக்கில் கைது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விசிக குருவளவன் சித்தரசூர் என்பவர் 2020 அக்டோபர் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மனுதர்மத்தில் பெண்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஒரு கருத்தரங்கில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக பா.ஜ.க-வினர் போராடி வருகின்றனர். மனுதர்மம்தான் பெண்களை அவமானப்படுத்திவிட்டது என்று பதிலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தொல் திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் நடந்த பா.ஜ.க போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தற்காலிகமாக காவல் வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குஷ்பு கைது செய்யப்படும் காட்சிகள், விடுதியில் தங்கியிருந்த காட்சிகளை எல்லாம் சமூக ஊடகங்களில் தவறான தகவல் சேர்த்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். பல கிண்டல் பதிவாக இருந்தாலும் ஒரு சில தவறான விஷமத்தனமான பதிவாக உள்ளன. அந்த வகையில் விபசார வழக்கில் குஷ்பு கைது செய்யப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive

இந்த வீடியோ சிதம்பரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதுதான் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். ஒன் இந்தியா, தந்தி டிவி, சன் டி.வி என எல்லா ஊடகங்களிலும் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தனர்.

திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்பதால் குஷ்பு கைது செய்யப்பட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில், மனுநீதியில் பெண்களைப் பற்றி தவறாக கூறப்பட்டுள்ளது என்று பேசிய திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த சென்ற போது குஷ்பு கைது செய்யப்பட்ட வீடியோவை எடுத்து விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேற்கண்ட தகவல் தவறானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:குஷ்பு கைது வீடியோவை வைத்து வதந்தி பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •