FACT CHECK: மு.க.ஸ்டாலின் படகு சவாரி படம் 2021-ல் எடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க தொண்டர்களை எல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவலுக்கு நிறுத்திவிட்டு, மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் படகு சவாரி செய்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வாக்குப்பதிவு இயந்திரங்கள், இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறை, பாதுகாப்பு வீரர்கள் ஆகியோர் புகைப்படத்துடன், மு.க.ஸ்டாலின் படகு சவாரி செய்யும் படத்தை கொலாஜ் ஆக ஒன்று சேர்த்து ஒரே படமாக வெளியிட்டுள்ளனர். 

இந்த பதிவை ஒரேநாடு மாலை இதழ் – பாஜக ஆதரவாளர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sampath Kumar என்பவர் 2021 ஏப்ரல் 19 அன்று பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஓய்வுக்காக, வெளியில் செல்வது வழக்கம். சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். எனவே, இந்த படம் தற்போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றே பலரும் கருதி பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. 

தி.மு.க தொண்டர்களை எல்லாம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் காவலுக்கு நிறுத்திவிட்டு, ஸ்டாலின் கொடைக்கானலில் படகு சவாரி செய்கிறார் என்ற வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி படம் தற்போது எடுக்கப்பட்டதா என்று நாம் ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். 

அப்போது இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு வெளியான யூடியூப் வீடியோவின் முகப்பு படமாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படகு சவாரி படம் இருந்தது. அந்த படத்தை எடுத்து தற்போது எடுக்கப்பட்ட படம் போல் பதிவிட்டுள்ளது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: samayam.com I Archive 1 I dailythanthi.com I Archive 2

தொடர்ந்து தேடியபோது, பல ஊடகங்களில் வெளியான செய்தி மற்றும் படங்கள் நமக்கு கிடைத்தன. கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் இரண்டு நாள் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்தார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் 2019ம் ஆண்டு எடுத்த படத்தை தற்போது எடுத்தது போல பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.

முடிவு:

ஸ்டாலின் படகு சவாரி செய்த படம் 2019ல் எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மு.க.ஸ்டாலின் படகு சவாரி படம் 2021-ல் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False