கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் தகவலில், “சனாதான தர்மத்தை நொட்டுவேன்னு அறுத்து தள்ளுவேன்னு சொல்லுற பயலுவ அத்தனை பேரும் மொள்ளமாரியும் முடிச்செவிச்சியுமா தான் சுத்துறாங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் பிரகாஷ் ராஜ் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்று நீராடியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், புகைப்படத்தைப் பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட படம் போல உள்ளது. அவரது கையின் பெருவிரலுக்கு அருகே கூடுதலாக ஒரு விரல் மறைந்திருப்பது போன்று புகைப்படம் உள்ளது. 

இதை உறுதி செய்ய இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை கன்னடத்தில் சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “இவரது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டன, அகற்றப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு ஊடகத்திலும் இந்த புகைப்படம் வெளியானதாக செய்தி நமக்குக் கிடைக்கவில்லை. பிரகாஷ் ராஜ் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்திலும் இந்த புகைப்படம் வெளியாகவில்லை. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இது ஏஐ புகைப்படம் என்பதை உறுதி செய்ய, ஏஐ படங்களைக் கண்டறிய உதவும் இணையதளங்களில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றிப் பார்த்தோம். அந்த இணையதளங்கள் எல்லாவற்றிலும் இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்தன.

இந்த புகைப்படத்தை யார் உருவாக்கினார்கள் என்று தேடிப் பார்த்தோம். நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரகாஷ் ராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில், அவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்புகொள்ளும் வசதி இருந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பி, இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது போல் உள்ளது, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேட்டோம். 

நமக்கு பதில் அளித்த அவர், “இது போலியான புகைப்படம். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் நீராடினார் என்று பரவும் புகைப்படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் நீராடினார் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False